தமிழ்நாடு

tamil nadu

Shakeel Akhtar: தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஷகீல் அக்தர் நியமனம்!

By

Published : Jun 13, 2023, 1:16 PM IST

தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஷகீல் அக்தர் நியமனம்
தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஷகீல் அக்தர் நியமனம்

சென்னை:தமிழ்நாட்டின் பல்வேறு துறைகள், அதிகாரிகள், அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முதன்மையான பணி ஆகும்.

இந்த ஆணையத்தில் அதிகாரமிக்க தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 ஆணையர் பொறுப்பிடங்கள், கடந்த நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, இதற்கான தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தேடுதல் குழு அமைக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்த தேடுதல் குழுவின் அறிக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இரண்டு முறை புதிய தகவல் ஆணையர் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தரை தேர்வு செய்து பரிந்துரை கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில்தான், குழுவின் இந்த பரிந்துரையை ஏற்று, தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக ஷகில் அக்தரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

யார் இந்த ஷகீல் அக்தர்? 1989ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஷகீல் அக்தர், கடந்த நவம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், 1962ஆம் ஆண்டு பிறந்தவர். முதுநிலை இயற்பியல் படித்தவரான ஷகீல் அக்தர், தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு, தருமபுரி மாவட்டம் அரூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பணியைத் தொடங்கினார்.

ஷகீல் அக்தர், திமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். மேலும், ஓய்வு பெறும்போது சிபிசிஐடி டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

தற்போது தமிழ்நாடு மாநில தகவல் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஷகீர் அக்தர் உடன் நான்கு தகவல் ஆணையர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஏடிஜிபி தாமரை கண்ணன், ஆர்.பிரியா குமார், டாக்டர் கே.திருமலைமுத்து மற்றும் டாக்டர் எம்.செல்வராஜ் ஆகிய 4 பேர் தகவல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க:தகவல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்குமா தமிழக அரசு..? - ஆர்டிஐ ஆர்வலர்கள் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details