தமிழ்நாடு

tamil nadu

அரசியல் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடையாது!

By

Published : Jul 16, 2023, 5:55 PM IST

தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு அரசியலில் பங்கு பெற்று, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கப்படக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:2023-2024ஆம் கல்வியாண்டிற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு 38 வருவாய் மாவட்டத்தில் இருந்தும் 386 ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும்; இவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ''தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை, ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. விருதுபெறும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் 10ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும், 2ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படியும் வழங்கப்பட்டு வருகிறது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் குறித்து அரசாணை வெளிடப்பட்டுள்ளது. தற்போது 38 வருவாய் மாவட்டத்திற்கும் 386 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

  • மாநில பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், ஆதி திராவிட, பழங்குடியினர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை, சமூக பாதுகாப்புத் துறை, நிதி உதவி பெறும் பள்ளிகள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள் மற்றும் சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் ஆகிய மேலாண்மைகளின் கீழ் செயல்படும் தொடக்க, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களும் விருதிற்குத் தகுதியுடையவர்கள்.
  • இவ்விருது வகுப்பறையில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. கல்வியாண்டில் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களைப் பரிந்துரை செய்யக்கூடாது. ஆசிரியர்கள் கல்வியாண்டில் குறைந்தது 4 மாதங்கள் (செப்டம்பர் 30ஆம் தேதிவரை -in Regular Service) பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். (மறுநியமன காலத்தைக் கணக்கில் ஈடுத்துக் கொள்ளக்கூடாது).
  • பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எவ்விதக் குற்றச்சாட்டிற்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராகவும், பொது சேவைகளில் நாட்டம் கொண்டவராகவும்; பள்ளி மாணர்களின் இடைநிற்றலைக் குறைத்தல், பள்ளி மாணவ சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல் கல்வித்தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.
  • அரசியலில் பங்கு பெற்று, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கப்படக் கூடாது. கல்வியினை வணிக ரீதியாகக் கருதி செயல்படும் ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இந்த விருதிற்குத் தகுதியற்றவர்களாக கருத வேண்டும். சிறந்த முறையில் பணிபுரியும் தமிழாசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களான ஓவிய ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கைத்தொழில் ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத் திறன் ஆசிரியர்களில் தகுதியானவர்களையும் விருதிற்குப் பரிந்துரைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • ஆசிரியர்களின் பரிந்துரை பெயர்பட்டியலினை மாவட்டத் தேர்வுக்குழுத் தலைவர் தமது சொந்தப் பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்களும் இது தொடர்பாக மந்தணம்(கமுக்கம்) காத்திடல் வேண்டும். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்காக வரையறை செய்யப்பட்ட படிவத்தில் மட்டுமே ஆசிரியர்களின் கருத்துருக்கள் அனுப்பப்படல் வேண்டும். ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை அடிப்படையில், பட்டியல் தயார் செய்து ஒரு விருதுக்கு 2 பேர் என்ற வீதத்தில் தேர்வு செய்து அனுப்பி வைத்தல் வேண்டும்.

வருவாய் மாவட்டத்திள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்து பரிந்துரை செய்யப்படும் பொழுது, அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அனைத்துப் பள்ளிகளையும் உள்ளடக்கியதாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருதுபெற்ற எந்த ஆசிரியரையும் பரிந்துரை செய்தல் கூடாது'' என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:Surya Speech: கல்வி மூலம் வாழ்க்கையைப் படியுங்கள் - அகரம் விழாவில் நடிகர் சூர்யா பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details