தமிழ்நாடு

tamil nadu

ஆன்லைனில் வேலை தேடுபவர்களே உஷார்.. எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்!

By

Published : Jul 25, 2023, 8:33 PM IST

Updated : Jul 26, 2023, 8:54 AM IST

ஆன்லைனில் வேலை தேடுபவர்களை குறிவைத்து பன்னாட்டு நிறுவன அலுவலகத்தை போல் செட்டப் அமைத்து, ஆன்லைன் இன்டர்வியூ நடத்தி மோசடி செய்யும் கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் மோசடி அதிகரித்து வருகிறது. நூதன முறையில் பல்வேறு வழிகளை கையாண்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலையில் சைபர் மோசடி கும்பல் களமிறங்கி உள்ளது. குறிப்பாக ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக் கூறி சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களிடம் மோசடியை அரங்கேற்றுகின்றனர்.

யூடியூப் சேனல்களில் லைக் அண்ட் ஷேர் மற்றும் ஹோட்டல்களுக்கு ரிவ்யூ செய்ய வேண்டும் எனக் கூறி பணம் சம்பாதிக்கலாம் எனத் தெரிவித்து முதலீடு செய்யக்கூடிய மோசடி செய்வது தொடர்பாகப் புகார்கள் காவல் நிலையத்தில் வந்த வண்ணம் உள்ளன.

அதன் மற்றொரு வடிவமாக வேலை தேடுபவர்களை குறி வைத்து மற்றொரு மோசடியை துவக்கியுள்ளனர். இந்த முறை வேலைகளை அடிப்படையாக வைத்து பொதுமக்களிடம் பணம் மோசடி செய்வதற்குப் பதிலாக, வேலைக்கு ஆள் எடுக்கும் முறையைப் பயன்படுத்தி பணத்தைப் பறிக்கின்றனர்.

குறிப்பாக linked in, naukri போன்ற ஆன்லைனில் வேலைக்காக விண்ணப்பிக்கும் நபர்களைக் குறி வைத்து இந்த மோசடியை அரங்கேற்றி வருகின்றனர். பன்னாட்டு நிறுவனம் எனக் கூறி இந்த வலை தளங்களில் பதிவு செய்து வேலை தேடுபவர்களின் தகவல்களை திரட்டுகின்றனர். அவ்வாறு வேலை தேடுபவர்களை மெயில் மூலமாக ஆன்லைன் இன்டர்வியூக்கு அழைப்பு விடுகின்றனர்.

குறிப்பாக கரோனா காலகட்டத்தில் இருந்து ஆன்லைன் மூலமாகவே பல்வேறு இன்டர்வியூகள் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தியதை, சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்த நூதன மோசடியில் இறங்கியுள்ளனர். சில நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து ஆன்லைன் இன்டர்வியூக்கு அழைப்பது போன்று வேலை தேடும் பட்டதாரிகளை அணுகுகின்றனர்.

ஆன்லைனில் வேலை தேடுபவர்கள் சிலர் சந்தேகப்பட்டு கூகுளில் வேலைக்கு அழைத்த நிறுவனங்களைப் பற்றி தேடும் போது, நிறுவனங்களின் பெயரில் போலியான இணையதளங்கள் சமூக வலைதளங்களில் உருவாக்கி நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதாகத் தெரிவிக்கின்றனர். இதனை நம்பி இது போன்ற ஆன்லைன் இன்டர்வியூக்களில் மாட்டி பணத்தை இழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்மையாக பன்னாட்டு நிறுவனங்களில் நடக்கும் எழுத்து தேர்வு, குரூப் தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் உள்ளிட்ட அனைத்து விதமான நேர்காணலையும் ஆன்லைன் மூலமாகவே நடத்துகின்றனர். வேலை தேடுபவர்களை ஆன்லைன் நேர்காணலின்போது நம்ப வைப்பதற்காக மோசடி கும்பல், ப்ராஜெக்ட் மேனேஜர் போன்று நிறுவன அதிகாரிகளை உருவாக்கி, நுனி நாக்கில் ஆங்கிலத்துடன் இன்டர்வியூ எடுப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் இன்டர்வியூ நடக்கும்போது மக்களை நம்ப வைப்பதற்காக உண்மையாக பன்னாட்டு நிறுவன அலுவலகம் போல் உட்கட்டமைப்புகளை வீடியோவில் தெரியும்படி வைத்து நம்ப வைக்கின்றனர். ஆன்லைனில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இன்டர்வியூக்களை நடத்திய பிறகு, இந்த வேலை வேண்டுமென்றால் 3 லட்சத்திலிருந்து 7 லட்சம் ரூபாய் வரை பணத்தைச் செலுத்தினால் உடனடியாக வேலை கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டி, வேலை தேடுபவர்களை ஏமாற்றுவதாக கூறுகின்றனர்.

அவ்வாறு வேலை கிடைத்தால் 50 ஆயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் பணம் சம்பளமாக கிடைக்கும் என கூறுகின்றனர். வேலை தேடுபவர்கள் ஆன்லைன் இன்டர்வியூ நடத்தும் விதத்தையும், இன்டர்வியூ நடக்கும் பொழுது வீடியோ காலில் அலுவலகத்தையும் பன்னாட்டு நிறுவனத்தில் உள்ளது போல் இருப்பதால் நல்ல வேலை கிடைத்து விட்டது என நம்பி பணம் செலுத்தி ஏமாந்துள்ளதாக சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து இன்டர்வியூ செய்வதாகக் கூறி போலியான ஆன்லைனில் இன்டர்வியூ நடத்தி மக்களை ஏமாற்றுவதாகத் தெரிவிக்கின்றனர். சில பிரபல நிறுவனங்கள் பெயரிலும் ஆன்லைன் இன்டர்வியூ நடத்தி மோசடி செய்யப்படுவதாகவும் சைபர் கிரைம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், வேலைக்கு விண்ணப்பிப்பவர்களை குறித்து, அவர்களின் முழுமையான தகவலை பெற்று அவர்கள் விண்ணப்பித்த வேலைக்கு ஏற்றார்போல் கேள்விகளை கேட்டு இந்த மோசடிகளை அரங்கேற்றுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்தப் புகார் தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் தொழில் நுட்ப அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வேலை தேடுபவர்கள் ஆன்லைன் இன்டர்வியூக்களுக்கு அழைக்கப்படும் போது கவனமாக இருக்க வேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:கோபியில் கனரா வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ரூ. 42 லட்சம் மோசடி - அதிரடியாக கைது செய்த போலீஸ்!

Last Updated : Jul 26, 2023, 8:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details