ETV Bharat / state

கோபியில் கனரா வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ரூ. 42 லட்சம் மோசடி - அதிரடியாக கைது செய்த போலீஸ்!

author img

By

Published : Jul 25, 2023, 6:55 PM IST

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி கனரா வங்கிக் கிளையில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகையை அடகு வைத்து ரூபாய் 42 லட்சம் மோசடி செய்த வங்கி நகை மதிப்பீட்டாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

canara bank
நகை மதிப்பீட்டாளர் ரூபாய் 42 லட்சம் மோசடி

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் கனரா வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கிளையில் கவுந்தப்பாடி, சலங்கபாளையம், செந்தாம்பாளையம், உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள் என வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

இங்குள்ள வாடிக்கையாளர்களில் பலரும் தொழில் செய்வதற்காக நகையை அடகு வைத்து பணம் பெற்றுச் செல்வது வழக்கம். இதற்காக வாடிக்கையாளர்களின் நகையின் தரம் குறித்து பரிசோதனை செய்து, அதற்குரிய மதிப்பீட்டுத் தொகையை கணக்கிட்டு வழங்குவதற்காக வங்கி சார்பில் வாய்க்கால்ரோட்டைச் சேர்ந்த அங்கமுத்து, என்பவரை கடந்த 2013ஆம் ஆண்டு அதிகாரிகள் நியமித்தனர். கடந்த 10 ஆண்டுகளாக அங்கமுத்து கனரா வங்கிக் கிளையில் பணிபுரிந்து வந்ததால், வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ள பலரும் நன்கு அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை, வாடிக்கையாளர்களாக உள்ள 10 பேரிடம், தன்னிடம் நகை உள்ளதாகவும், குடும்பத் தேவைக்காக நகையை அடகு வைக்க வேண்டும் என்றும், தான் வங்கியில் பணிபுரிவதால், தனது பெயரில் நகையை அடகு வைக்க முடியாது எனவும் கூறிய அங்கமுத்து, வாடிக்கையாளர்கள் பெயரில் நகையை அடகு வைத்துத் தருமாறு கூறி உள்ளார்.

மேலும், 6 மாத காலத்தில் இதே போன்று 10 வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகையை அடகு வைத்து 42 லட்சம் ரூபாயை வங்கியில் கடனாகப் பெற்றுள்ளார். இந்நிலையில் வங்கியின் அதிகாரிகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள நகையை சோதனை செய்வதற்கு வருவதாக தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து நகை மதிப்பீட்டாளர் அங்கமுத்து, உடல் நிலை சரியில்லை எனக் கூறி விட்டு விடுப்பில் சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை பரிசோதனை செய்த போது, அதில் வாடிக்கையாளர்கள் 10 பேர் அடகு வைத்திருந்த நகை, போலி நகை என்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்களை அழைத்து விசாரணை செய்த போது, வங்கி நகை மதிப்பீட்டாளர் அங்கமுத்து கொடுத்த நகை என்பதும், அவருக்காகவே வங்கியில் அடகு வைத்ததும், அடகு வைக்கப்பட்டு வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்ததும், அவற்றை அங்கமுத்து பெற்றுக்கொண்டதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அங்கமுத்து மீது வங்கி அதிகாரிகள் ஈரோடு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அந்தப் புகார் கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து போலி நகையை அடகு வைத்து வங்கியை ஏமாற்றிய அங்கமுத்து மீது கவுந்தப்பாடி காவல்துறையினர் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து மாயமான அங்கமுத்துவை தேடி வந்தனர்.

இந்நிலையில் கவுந்தப்பாடியில் தனது உறவினரைப் பார்க்க வந்த அங்கமுத்துவை, காவல்துறையினர் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட அங்கமுத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு; உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.