தமிழ்நாடு

tamil nadu

பள்ளி நண்பர்களுடன் இணைந்து வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை

By

Published : Aug 15, 2022, 9:11 PM IST

பள்ளி நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து தனியார் கோல்டு லோன் நிறுவனத்தில் இருந்து 32 கிலோ தங்கத்தை திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

பள்ளி நண்பர்களுடன் இணைந்து வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை
பள்ளி நண்பர்களுடன் இணைந்து வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை

சென்னை: அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் உள்ள ஃபெட் கோல்டு லோன் நிறுவனத்தில் கடந்த 13 ஆம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்தும், ஊழியர்களை கட்டிபோட்டு கத்தியைக் காட்டி மிரட்டியும் 32 கிலோ நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற கூடுதல் ஆணையர் அன்பு உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரும்பாக்கம் போலீசார் ஊழியர்களை மீட்டு, சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றினர். மேலும் கோல்டு லோன் நிறுவன மேலாளர் சுரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பள்ளி நண்பர்களுடன் இணைந்து வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை

கோல்டு லோன் நிறுவன ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில், அதே நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றி வரும் முருகன் என்ற நபர் கூட்டாளிகளுடன் இணைந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 11 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி (28), சந்தோஷ் (30) ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பள்ளி நண்பர்களுடன் இணைந்து வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை

மேலும், கொள்ளைக்கு உடந்தையாக செயல்பட்ட சக்திவேல், செந்தில் குமரன் என்பவர்களைப் பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதில் 8.5 கோடி மதிப்பிலான 18 கிலோ தங்கம் நகைகள், 2 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் கொள்ளைச் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட முருகன் வழக்கறிஞருடன் கொரட்டூர் காவல் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தார். இன்னும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நபர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் இருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 18 கிலோ தங்கம் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், சென்னை காவல் ஆணையர் அங்கு வைக்கப்பட்டிருந்த நகைகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது,

பள்ளி நண்பர்களுடன் இணைந்து வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை

“கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றிய நபர் குறித்த விவரங்கள் தெரியவந்ததால், அவர் கடந்த 10 நாட்களாக யார் யாரை தொடர்புகொண்டார், எங்கெல்லாம் சென்றார் போன்ற விவரங்களையும், கொள்ளையர்கள் எந்தெந்த திசையில் வந்து சென்றனர் போன்ற தகவல்களையும் சேகரித்த போலீசார் அதன் மூலம் துப்பு கிடைத்து இருவரை கைது செய்தும் ஒருவனை பிடித்து விசாரித்தும் 18 கிலோ தங்க நகைகளை மீட்டதாக தெரிவித்தார்.

மேலும், இந்த கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான முருகன் போலீசாரிடம் சிக்கியுள்ள நிலையில், இன்னும் இக்கொள்ளையில் 2 அல்லது 3 பேர் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளதாகவும், அவர்களையும் கைது செய்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி மீதமுள்ள நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றிய பின் கொள்ளையர்கள் தனித்தனியாக பிரிந்து சிலர் சென்னையை விட்டு வெளியே சென்றுவிட்டதாகவும், சிலர் சென்னைக்குள்ளேயே தலைமறைவாக இருந்ததாகவும் தெரிவித்த அவர், விசாரணையில் உள்ளதால் தலைமறைவாக உள்ளவர்களை பிடிபட்ட பின் முழு விபரங்கள் வெளியிடப்படும் என்றார்.

மேலும், கொள்ளைச் சம்பவம் நடைபெற்று 20 நிமிடங்கள் கழித்துதான் காவல்துறைக்கு தகவல் தெரியவந்ததாகவும், கோல்டு லோன் நிறுவனத்தில் உள்ள ஸ்டார்ங் ரூம் திறக்கப்படும்போது தகவல் தெரிவிக்காத பட்சத்தில் தலைமை அலுவலகத்தில் அலாரம் அடிக்கும், ஆனால் இந்த இடத்தில் அவ்வாறு நடக்காததற்கு முக்கிய கொள்ளையன் காரணம் என ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

அலாரம் அடிக்காதது ஏன் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார். மேலும், பல்வேறு வங்கிகள் பெருகிவிட்ட நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் அடுத்து நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்துள்ள அனைத்து வங்கிகளிலும் ஆய்வு செய்து ஸ்ட்ராங் ரூம், அலாரம் சிஸ்டம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க பரிந்துரைக்க உள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

கொள்ளையர்கள் கொள்ளையடித்த நகைகளில் பாதியை மறைத்துவிட்டு பாதியை எப்படி பணமாக மாற்றி செலவு செய்வது என்பது குறித்து திட்டமிட்டிருந்ததாகவும், முக்கிய குற்றவாளியான முருகனிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் தகவல்கள் தெரியவரும் எனவும் அவர் கூறினார்.

கொள்ளைச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட 3 பேரை தவிர அவர்களுக்கு இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் கொடுத்து உதவியவர்கள், கொள்ளைக்குப் பின் வெவ்வேறு இடங்களில் வைத்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கைமாற்றியவர்கள் என மொத்தம் 6 நபர்கள் முதல் 7 நபர்கள் இந்த கொள்ளையை திட்டமிட்டதாக தெரிவித்த அவர், மதுரவாயில், பல்லாவரம் பகுதிகளில் இவர்களது நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

கொள்ளையர்களில் ஒருவன் தனது அடையாளத்தை மறைக்க முயன்று தனது முடியை சவரம் செய்துகொண்டதாக கூறிய அவர், பெரிய மாற்றம் ஏதும் அதன்மூலம் ஏற்படவில்லை எனவும், ஒரே பகுதியைச் சேர்ந்த, ஒரே பள்ளியில் படித்த நபர்கள் கூட்டு சேர்ந்து இக்கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர் விசாரணையில் கூடுதல் தகவல் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் மீதும் பழைய வழக்குகள் ஏதும் இல்லை. சிறிய ஒரு கத்தியை வைத்து மட்டுமே கொள்ளைச் சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர் எனவும், தற்போதுவரை நடைபெற்ற விசாரணையில் 10 நாட்கள் திட்டமிட்டு கொள்ளைச் சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றியிருக்கலாம் என யூகித்துள்ளதாகவும் தெரிவித்த காவல் ஆணையர் முக்கிய குற்றவாளியான முருகனிடம் விசாரணை நடத்திய பின்னர் கூடுதல் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றார்.

அதுமட்டுமல்லாமல் கொள்ளையர்கள் கொடுத்த குளிர்பானத்தை குடித்தவுடன் மயக்கம் ஏற்பட்டதாக காவலாளி வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், ஆனால் சி.சி.டி.வி காட்சிகளை பார்த்தவரை மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடித்த பின்னும் காவலாளிக்கு பெரிய அளவில் மயக்கம் ஏற்பட்டதாக தெரியவில்லை எனவும், இதில் நிறுவன ஊழியர்கள் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் பிடிக்கப்பட்டு மீதமுள்ள நகைகளும் பத்திரமாக மீட்கப்படும்” எனவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்னதாக வலிமை திரைப்பட வசனங்களை முக்கிய கொள்ளையன் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதாகவும், ஒரே நாளில் பணக்காரனாக ஆக திட்டமிட்டு வாய்ப்பு கிடைத்த போது தெரிந்தே வங்கியில் கொள்ளையடித்திருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் 24மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்ததற்காக சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு டிஜிபியிடம் இருந்து 5 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை பெற உள்ளதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க:அரும்பாக்கம் வங்கி கொள்ளை.. 18 கிலோ தங்கம் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details