தமிழ்நாடு

tamil nadu

மீன்வளத்துறை பட்டதாரிகளுக்கு கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்: ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய அறிவுரை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 4:25 PM IST

TN Governor RN Ravi: தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு தேவை எனவும், மீன்வளத்துறை பட்டதாரிகள் மீன்பிடி தொழில் முனைவோராக வேண்டும் எனவும், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை அனைவரும் பின்பற்றுவோம் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

ஆளுநர் ஆர் என் ரவி

சென்னை: விவசாயத்தில் நிலையான மற்றும் உள்ளடக்கிய மேம்பாட்டிற்காக வேளாண்சமூகவியலாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆளுநரின் 'எண்ணித் துணிக' பகுதி-12 நிகழ்ச்சி சென்னை ராஜ்பவனில் இன்று (நவ.5) நடைபெற்றது. இதில், விவசாயத்துறை ஆளுமைகள், விவசாயிகள், மீனவர்கள், விஞ்ஞானிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பினர், ஆய்வறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், 'சமூகத்துக்கும் தேசத்துக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் விவசாயிகளுக்கு பெரும் நன்றி. மீன்வளத்துறை தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு முக்கியமான துறை என்றும் அத்துறையின் வளம் இன்னும் சிறப்பாக பயன்படுத்தப்படவில்லை. இத்துறையின் தொடர்புடைய மக்களிடையே அதிக விழிப்புணர்வையும் ஊக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

திறமையான மீன்வளத்துறையில் பட்டம் முடித்து விட்டு வேறு துறைகளில் வேலை தேடும் பட்டதாரிகள், கடல்சார் துறைகளிலேயே பணிபுரியும் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். தாங்கள் பெற்ற கள அறிவு மற்றும் போதிய திறன்கள் மூலம், மீன்பிடி தொழில் முனைவு போன்ற பல்வேறு மீன்வளத்துறை களங்களைக் கண்டறிந்து தொடர்வதன் மூலம் அந்த பட்டதாரிகள் இந்தத் துறையில் சிறந்தும் அற்புதமான வெற்றியை எட்டி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும். தமிழ்நாட்டில் மீன்பிடித்துறையின் பயன்படுத்தப்படாத தளங்கள் ஏராளமாக உள்ளன' எனவும் குறிப்பிட்டார்.

'காற்று மற்றும் தண்ணீருக்கு அடுத்தபடியாக திகழும் உணவு இன்றியமையாத உணவை நமக்கெல்லாம் வழங்கும் விவசாயிகளின் பங்களிப்பை கணக்கிடுவது மனிதாபிமானமற்ற போக்கு. இந்த கோணத்தில் வாழ்க்கையை அணுகுவது உலகுக்கு மாபெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது வளர்ச்சி அணுகுமுறையை ஜிடிபி மைய கண்ணோட்டத்திலிருந்து மனிதத்தை மையமாகக் கொண்டதாக மாற்ற பிரதமர் அழைப்பு விடுத்ததாகவும், ஜிடிபி புள்ளியை அடிப்படையாகக் கொண்ட கணிசமான மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைகளே இல்லை என்பதையும் பிரதமர் உச்சிமாநாட்டில் விளக்கியதாக ஆளுநர் கூறினார்.

செல்வத்தை உருவாக்குவது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், சமத்துவமாகவும் இல்லாமல் போனால், ஜிடிபியை மையமாகக் கொண்ட பார்வை பேரழிவுக்கே வழிவகுக்கும். இது குடும்ப வாழ்க்கையில் இடையூறுகள் மற்றும் மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்வதற்கு வழிவகுக்கும். சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் இப்போது உள்ளதுபோல, அதிக எண்ணிக்கையிலான முதியோர் இல்லங்கள் இருக்கும் என்று நாம் நினைத்துப் பார்த்ததில்லை. இது மகிழ்ச்சியை தருகிறதா? அல்லது மனநிறைவை தருகிறதா? என கேள்வி எழுப்பிய ஆளுநர், இத்தகைய நுகர்வோர் சார்ந்த வாழ்க்கை முறை நிலையானது அல்ல என்று நினைவூட்டினார்.

வேளாண் சமூகவியலாளர்கள் ஆய்வு; டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு:விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தினால் இந்நிலைமைகள் மாறலாம். இதனால், நாம் தொலைதூர இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. நமது குடும்பம், நமது சமூகம் மற்றும் நமது ஆதரவு அமைப்பு அப்படியே நிலைத்து இருக்கும். நிலையான மற்றும் உள்ளடக்கிய மேம்பாட்டிற்காக வேளாண் சமூகவியலாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயத்துறையை மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் புதுப்பித்து, அது பற்றிய அதிக விழிப்புணர்வைப் பெற வேண்டியது அவசியம் எனவும் இன்று, டிஜிட்டல் உள்கட்டமைப்பு நம் நாட்டில் அனைவருக்கும் அணுகக்கூடியதாக உள்ளது.

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை பின்பற்றுவோம்:மேலும், வாடிக்கையாளர்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் நவீனமயமாக செயல்பட்டால் இந்த இடைவெளியைக் குறைக்க முடியும். பிரதமர் விவசாயத்துறைக்கு அளிக்கும் உந்துதல் மேலதிக அறிவியல், உற்பத்தி, வெகுமதி மற்றும் மனிதத்தை மையமாகக் கொண்டது. உபரியாகும் உணவு மற்றும் அதற்கான செலவை உணர்ந்து, இயற்கை விவசாயத்தை பயன்படுத்தி, விவசாயத்தை வாழ்வாதாரமாக மாற்ற டாக்டர்.ஜி. நம்மாழ்வார் வழங்கிய தத்துவத்தையும் வழியையும் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

தமிழக விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண்தொழில் முனைவோர், விவசாய புரட்சியில் நம் தேசத்தை வழி நடத்த வேண்டும் என பேசினார். முன்னதாக, மாநிலம் முழுவதும் விவசாய பொருட்கள் உற்பத்தியாளர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு விவசாய மற்றும் மீன்பிடி பொருட்களின் ஸ்டால்களை ஆளுநர் பார்வையிட்டு அவற்றின் பயன்கள் குறித்து உற்பத்தியாளர்களிடம் கலந்துரையாடினார்.

கஷ்டப்படும் விவசாயிகள்; அதிக ரசாயனம் கலந்த உரங்களால் வரும் அபாயம்:இந்த நிகழ்ச்சியின் போது கூட்டத்தில் இருந்த விவசாயி ஒருவர் எழுந்து, நூறுநாள் வேலைத் திட்டத்தால் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் உள்ளது. மேலும் விவசாயத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் கலக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விவசாயிகள் கஷ்டத்திலும், நஷ்டத்திலும் செத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் நிலைமை மாறுவதற்கு என்னச் செய்ய போகிறீர்கள் என எழுப்பியக் கேள்விக்கு, அவரின் கேள்வி மிகவும் நேர்மையாக உள்ளது. அனைத்திலும் ரசாயனம் கலந்த உரங்களை பயன்படுத்துகிறோம். இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். தற்போது, பயன்படுத்தப்பட்டு வரும் ரசாயன உரங்களின் பயன்பாட்டை ஒரே இரவில் மாற்றம் செய்ய முடியாது. அதனை மாற்ற முயற்சி செய்வோம்' என பதிலளித்தார்.

விவசாயி ஒருவர் ஆளுநரிடம் மத்திய ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் மூலம் கறவை மாடுகள், வண்டி மாடுகள் வழங்கப்பட்டது நிறுத்தப்பட்டது. அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:"பயங்கரவாதிகளை தமிழக, கேரள அரசுகள் ஊக்குவிக்கின்றன" - எல்.முருகன்!

ABOUT THE AUTHOR

...view details