தமிழ்நாடு

tamil nadu

கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

By

Published : Nov 26, 2021, 4:05 PM IST

Updated : Nov 26, 2021, 7:31 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் இன்றும் (நவ.26), நாளையும் (நவ.27) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, " வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வரும் மூன்று நாட்கள் மழை தீவிரமாக இருக்கும்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.26) திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (நவ.27) மழை நிலவரம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (நவ.28) மழை நிலவரம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும்.

எதற்காக ரெட் அலர்ட்?

தொடர் மழை காரணமாகவும், ஏற்கனவே பெய்த மழையை கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதே போல் கடலோர மாவட்டங்களை ஒட்டிய உள் மாவட்டகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதீத மழை எச்சரிக்கையாக ரெட் அலர்ட் கொடுக்கப்படவில்லை என எடுத்துரைத்தார்.

மேலும், வடகிழக்கு பருவ மழை காலகட்டத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை தமிழ்நாட்டில் 58 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இயல்பு மழை அளவு 34 செ.மீ, இது இயல்பை விட 70 விழுக்காடு அதிகம். சென்னையைப் பொறுத்தவரை 98 செ.மீ மழை கிடைத்துள்ளது. இயல்பு மழை அளவு 59 செ.மீ, இயல்பை விட 67 விழுக்காடு அதிகம்.

சென்னையை பொறுத்தவரை

அடுத்த 24 மணி நேரத்திற்கு, நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று, நாளை குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வரும் 29ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில், அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைணவ சான்றிதழ் பயிற்சி வகுப்பு

Last Updated :Nov 26, 2021, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details