தமிழ்நாடு

tamil nadu

மத உணர்வை தூண்டும் வகையில் பேசி 'சஸ்பெண்ட்' ஆன காவலர்... சம்பவத்தின் பின்னணி என்ன?

By

Published : Aug 7, 2023, 2:36 PM IST

சென்னையில் மத உணர்வை தூண்டும் வகையில் பேசி சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியிட்ட போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்னணி குறித்து இச்செய்தியில் காணலாம்.

traffic police Rajendran suspended
மத உணர்வை தூண்டும் வகையில் பேசி 'சஸ்பெண்ட்' ஆன காவலர்

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்கள் வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் கிறிஸ்டோபர் என்ற நபர் கிருஸ்த்துவ மதம் தொடர்பான வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதைக் கண்ட புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆடியோ ஒன்றை பதிவு செய்து அதே வாட்ஸ் அப் குருப்பில் பகிர்ந்துள்ளார்.

அவர் பேசிய அந்த ஆடியோ பதிவில், "கிறிஸ்த்துவ மந்திரத்தைக் கூறி, சிறு தண்ணீரை மாற்றுத்திறனாளியின் மீது தெளித்ததும் எழுந்து நடந்துவிடுவார்கள் என உள்ளது. அது போன்று நடக்குமா?. எனவே இது போன்று மதம் தொடர்பான பாடலை எல்லாம் அனுப்பக்கூடாது. இது இந்திய நாடு, ராமர் பூமியில் மசூதியை இடித்து கோயில் கட்டி வாழ்கிறோம்.

நாங்கள் தான் பூஜை செய்வோம், பாராளுமன்றத்தில் செங்கோல் வைப்போம், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களான நீங்கள் அதைத்தடுத்து நிறுத்தி பாருங்கள். அது முடியவில்லை என்றால் பாகிஸ்தான், சவுதி போன்ற நாடுகளில் சென்று படியுங்கள்.தற்போது இந்தியாவில் 80% இந்துக்கள் உள்ளோம், 20% மட்டுமே முஸ்லீம், கிறிஸ்துவர்கள் உள்ளனர். இங்கு யார் மெஜாரிட்டியோ அவர்கள் தான் இந்தியாவை ஆளுவார்கள், ஆகையால் இது போன்ற பாடல்களை எல்லாம் பரப்பாதீர்கள்" என பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது அந்த ஆடியோ தொடர்பாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரனிடம் கேட்ட போது, "கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நண்பர்கள் உள்ள வாட்ஸ் குரூப்பில் மதம் தொடர்பான ஆடியோ பகிர்ந்ததாகவும், தனது நண்பர் ஒருவர் போலீஸ் துறையில் இருந்து மத போதகராக மாறி இருந்து வருவதாகவும், அவர் அடிக்கடி இந்துக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் குரூப்பில் வீடியோ பரப்புவார் எனவும் குறிப்பிட்டார்.

அதே போல சமீபத்தில் ரதயாத்திரை குறித்து அவதூறாக பரப்பும் விதமாக அனுப்பிய வீடியோவுக்கு தான் பதிலளிக்கும் விதமாக இந்த ஆடியோவை பதிவிட்டதாகவும், அப்போது தனக்கும் தனது நண்பர் கிறிஸ்டோபருக்கும் நிறைய உரையாடல் நடந்ததாகவும், அதனை மனதில் வைத்துக் கொண்டு சில உரையாடலை சித்தரித்து இந்த ஆடியோவை மட்டும் சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டதாகவும்" தெரிவித்தார்.

தற்போது அந்த ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை காவல் ஆய்வாளரிடம் நடைபெற்றது. அந்த விசாரணையில், கடந்த 30 ஆண்டுகளாக ராஜேந்திரன் காவல் துறையில் பணியாற்றி வருகின்றார். ராஜேந்திரனின் நண்பரான கிறிஸ்டோபர் காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று தாம்பரத்தில் உள்ள தேவாலயத்தில் மதபோதகராக இருந்து வருகிறார்.

மேலும் ராஜேந்திரன், கிறிஸ்டோபர் உட்பட பல காவலர்களுக்கு வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் 180க்கு மேற்பட்ட நண்பர்களுடன் குழுவில் இணைந்துள்ளார். அதில் கிறிஸ்டோபர் தொடர்ச்சியாக கிறிஸ்தவ மதத்தை உயர்த்தும் வகையிலும், இந்து மதத்தை தாழ்த்தியும் வீடியோ, ஆடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக குழுவில் உள்ள மற்ற நண்பர்கள் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்துள்ளனர். மேலும் இது போன்ற பதிவுகளை பதிவு செய்ய வேண்டாம் நண்பர்களுக்குள் நண்பர்களாக பேசுங்கள் என மற்ற நபர்களும் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் கிறிஸ்டோபர் இந்துக்களைப் பற்றி வீடியோவுடன் பதிவு செய்ததை அனைவரும் கண்டித்தது போலவே ராஜேந்திரனும் ஆடியோ மூலமாக கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த ஆடியோ வைரலானதை அடுத்து புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல் பணியை விட்டு வாட்ஸ் அப்பில் தேவையற்ற பதிவுகளை பதிவிட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "ராம ராஜ்ஜியம் தான் நடக்கும்" - மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசிய ஆடியோ வைரல்.. காவலர் ராஜேந்திரன் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details