தமிழ்நாடு

tamil nadu

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்: தாய் கண்ணீர் மல்க பேட்டி!

By

Published : Jul 4, 2023, 6:37 PM IST

'எனது குழந்தையை மாற்றுத்திறனாளியாகப் பார்க்கிறேன், குழந்தையை விட பணத்திற்கு முக்கியத்துவம் அளிப்பார்களா?' என சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது முகமது மஹிரின் தாய் அஜிஸா கண்ணீர் மல்கப் பேட்டியளித்துள்ளார்.

குழந்தையின் தாய் கண்ணீர் மல்க பேட்டி
குழந்தையின் தாய் கண்ணீர் மல்க பேட்டி

குழந்தையின் தாய் கண்ணீர் மல்க பேட்டி

சென்னை: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றகுழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.இந்நிலையில் இவ்விவகாரம் குறித்துப்பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தனது குழந்தை குறை மாதத்தில் பிறந்தது எனவும், பிறக்கும்போதே பல்வேறு உடல் நலக்குறைபாடுகளுடன் இருந்ததாக கூறியதுடன், குழந்தையின் தலை 64 சென்டி மீட்டர் எனக் கூறினார். ஆனால், தான் எனது குழந்தையின் தலையை இன்று அளந்து பார்த்துவிட்டுத்தான் வந்தேன். 53 சென்டிமீட்டர் தான் இருக்கிறது. அமைச்சருக்கு யாரோ தவறான தகவலை அளித்துள்ளனர்’ என பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மஹிர் கடந்த ஜூன் 25ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தலையில் நீர் கசிவு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அந்த குழந்தைக்கு தீவிர hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது. அதற்காக ஐந்து மாதத்தில் நீர் கசிவை உறிஞ்சி எடுக்க VP shunt எனும் சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், அந்தக் குழந்தை நீர் கசிவை உறிஞ்சுவதற்காக பொருத்தப்பட்ட VP shunt எனும் டியூப் ஆசனவாய் மூலம் வெளியே வந்து விட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக 25ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, அகற்றப்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை வார்டில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளது. அப்போது கடந்த வியாழன்கிழமை(ஜூன் 29) குழந்தையின் கையில் ரத்த சிவப்பாகத் தெரிவதைக் கண்டறிந்த தாய் மருத்துவரிடம் தெரிவித்தாகவும், அதனை பணியில் இருந்து செவிலியர் சரியாக கவனித்து சிகிச்சை அளிக்காத காரணத்தினால், அதனை மருத்துவர்களிடம் எடுத்துக் கூறியதாகவும், சனிக்கிழமை தான் மருத்துவர்கள் அதனைப் பார்த்து, மேல் சிகிச்சை மேற்காெள்ள எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், சனிக்கிழமை குழந்தையின் கையில் ரத்தம் செல்லாமல் இருப்பதை மருத்துவர் கண்டறிந்த பின்னரே மேல் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் இதில் தவறு நடந்திருக்கிறதா? என்பதை விசாரிக்க சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ரத்தநாளப்பிரிவுத்துறைத் தலைவர் ஸ்ரீதரன், பொது அறுவை சிகிச்சைத்துறைத் தலைவர் சாந்தி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் குழந்தைகள் ரத்தவியல்துறையின் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் குழந்தையின் பெற்றோர்களிடம் அந்த மூன்று நாட்களில் நடந்தவை குறித்து விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த முகமது மஹிரின் தாய் அஜிஸா, "சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலை 10 மணிக்கு விசாரணை என்று அழைத்தனர். எந்த தேதியில், எதனால் இந்த பிரச்சனை ஆரம்பித்தது என்று கேட்டார்கள், நாங்களும் பதில் அளித்தோம். எழுத்துப்பூர்வமான கேள்வியாகத் தான் இருந்தது. குழந்தைக்கு என்னென்ன பிரச்னைகள் என்று கேட்டார்கள்.

குழந்தைக்கு 29ஆம் தேதி ஊசி போட்ட பின் தான் பிரச்னை வந்தது. அன்றே செவிலியரிடம் நான் சொன்னேன். வலது கை விரலில் இருந்து மணிக்கட்டு வரை கருஞ் சிவப்பாக மாறி இருந்தது. அதைத்தொடர்ந்து நான் வலியுறுத்திய பின் தான் ட்ரிப்ஸ் போடுவதற்கான வென்ஃப்ளானை எடுத்தார்கள்.

மருத்துவர் மற்றும் செவிலியர் அலட்சியத்தால் தான் என் மகன் வலது கையை இழந்திருக்கிறான். நான் சொன்ன போது எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. யாரும் இந்த தவறை மறந்துகூட செய்யக்கூடாது. இதற்காகத்தான் விசாரணை கேட்கிறேன். விசாரணை திருப்திகரமாக இருந்தது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுக்கிறார்கள் என்று பார்க்கலாம். விசாரணையின் போது மூன்று பக்கங்கள், 21 கேள்விகள் இருந்தன. மேலும் உங்களிடம் விசாரணை முடிவதற்கே 1 மணி ஆகிவிட்டது. எனவே, அனைவரையும் விசாரித்து விட்டு பதில் அளிப்போம் என்று தெரிவித்தனர்.

என் மகனுக்கு நடந்த அநீதி போல் யாருக்கும் நடக்கக்கூடாது. என் மகனுக்கு தமிழக அரசு பதில் சொல்லி ஆக வேண்டும், அதுவரை நான் போராட்டத்தைத் தொடருவேன். எந்த தாயிடமும் குறைமாதத்தில் பிறந்த குழந்தை என்ற வார்த்தையினை உபயோகிக்கக் கூடாது. அமைச்சர் பலமுறை குறைமாத குழந்தை, பிறக்கும்போதே குறைபாடுடைய குழந்தை என்று தெரிவித்தார்.

குறைமாதத்தில் பிறந்தாலும் எனது குழந்தையை முழுமையானவனாக அரசு மருத்துவமனைக்கு கடந்த 25ஆம் தேதி கொண்டு வந்தேன். ஆனால், தற்பொழுது ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளியாக பார்க்கிறேன், எந்தத் தாயாவது தனது குழந்தையை விட பணத்திற்கு முக்கியத்துவம் அளிப்பார்களா?

மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று எனது குழந்தை குறை மாதத்தில் பிறந்தது எனவும், பிறக்கும் போதே பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் இருந்ததாகவும் கூறியதுடன், குழந்தையின் தலை 64 சென்டி மீட்டர் எனக் கூறினார். ஆனால், நான் எனது குழந்தையின் தலையை இன்று அளந்து பார்த்துவிட்டுத்தான் வந்தேன். 53 சென்டிமீட்டர் தான் இருக்கிறது. அமைச்சருக்கு யாரோ தவறான தகவலை அளித்துள்ளனர். அதனை அவர் கூறுகிறார்.

அமைச்சர் வரும்போது மட்டும் தான் அனைவரும் உடன் இருந்தார்கள். அதன் பின் யாரும் இல்லை. நான் மட்டும்தான் இருந்தேன். பாதிக்கப்பட்ட எங்களை வைத்துப் பேசவில்லை. 26ஆம் தேதி இரண்டு கையுடன் நல்ல நிலையில் தான் என் மகனை கொண்டு வந்து இன்று என் மகனை ஒற்றைக் கையுடன் மாற்றுத்திறனாளியாகப் பார்க்கிறேன்.

இதற்கு அரசு பதில் கூற வேண்டும். பெற்ற தாய் குழந்தையைப் பற்றி கவலைப்படுவார்களா, இல்லை பணத்தைப் பற்றி யோசிப்பார்களா? நாங்கள் பணத்திற்காகப் பேசுவதாக கூறுகின்றனர். 29ஆம் தேதிக்குப் பின்னர் நடந்தவை குறித்து விசாரணைத் தேவை" என ஒன்றரை வயது குழந்தை முகமது மஹிரின் தாய் அஜிஸா கண்ணீர் மல்க கூறினார்.

இதையும் படிங்க:சனாதன தர்மம் குறித்த விளக்கம் கேட்டு ஆளுநருக்கு மீண்டும் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details