சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
அங்கு ஆயிரக்கணக்கான பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தக் குவிந்த நிலையில், பொது அஞ்சலிக்காக இன்று காலை 6 மணி அளவில் விஜயகாந்த்தின் உடல் தேமுதிக அலுவலகத்திலிருந்து சென்னை தீவுத்திடலுக்குக் கொண்டு வரப்பட்டது.
பின்னர் ஏராளமானோர் விஜயகாந்த்தின் உடலிற்கு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச் சடங்கிற்காகத் தீவுத்திடலிலிருந்து பொதுமக்களின் அஞ்சலியோடு இன்று மாலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், விஜயகாந்த்தின் மனைவியும், தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, "விஜயகாந்த்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்கச் சிறந்த முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தீவுத்திடலில் இடம் ஒதுக்கிக் கொடுத்து இறுதி ஊர்வலத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு தேமுதிக சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.