தமிழ்நாடு

tamil nadu

செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்: கி.வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம்!

By

Published : Jun 30, 2023, 10:58 AM IST

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டதற்கு கி.வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இணையத்தில் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

senthil balaji
செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்

சென்னை: பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்ததைத் தொடர்ந்து, நேற்று (ஜூன்.29) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்து ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டார். இவ்வாறு ஆளுநர் வெளியிட்ட அந்த நோட்டீஸுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: "இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை முதலமைச்சர் நியமித்ததை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டிஸ்மிஸ் செய்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க அவர் பதவிப் பிரமாண்ம் எடுத்துக் கொண்டுள்ள அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது என்பதால், அரசியல் சட்டத்திற்கு எதிரான ஆளுநரின் இந்த சட்ட முரணான, அதீத நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படி ஓர் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் ஆணையை ஆளுநர் ரவி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் பிறப்பித்துள்ளார் என்பதை விளக்குவாரா?. எப்படி ஓர் அமைச்சரை ஆளுநரால் தன்னிச்சையாக நியமிக்க முடியாதோ, அதே போன்று அவரால் பதவி நீக்கமும் செய்ய முடியாதே!.

அரசியல் சட்டப்படி (கூறுகள் 163, 164 (1)) முதலமைச்சரின் அறிவுரைப்படிதான் ஆளுநர் எந்த அமைச்சரையும் நியமிக்கவும் முடியும், நீக்கவும் முடியும். ஆளுநருக்கென்று எந்த தனி அதிகாரமும் கிடையாது. ஒருவர் மீது விசாரணை நடப்பதாலோ, நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதாலோ அந்த அமைச்சரை நீக்கச் சட்டத்தில் இடம் கிடையாது.

ஒரு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வந்த பிறகே, அதிலும் கூட 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனையை நீதிமன்றம் அளித்தால்தான் அமைச்சரையோ அல்லது அதுபோன்ற வேறு பதவிகள் வகிப்போரையோ நீக்க முடியும் என்ற சட்டத்தைக் கூட ஆளுநர் அறியமாட்டாரா?. தமிழ்நாடு திமுக அரசு மக்களின் அபரிமித ஆதரவைப் பெற்றுள்ளது என்பதால், வேண்டுமென்றே அதற்கு எதிராக இப்படி திட்டமிட்ட வம்பு, வல்லடியை இந்த ஆளுநர் உருவாக்குகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக வியூகம் வகுக்கிறார். இவரைப் பின்புலத்திலிருந்து இயக்குவோருக்கு நிச்சயம், மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவர் என்பது உறுதி. ஆளுநருக்கு எதிராகக் கண்டனக் குரலை எழுப்பி, ஜனநாயகத்தைக் காப்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவரது முக்கியக் கடமையாகும். அரசியல் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை அனைத்துத் தரப்புக்கும் உண்டு.

சட்டப் போராட்டம், சட்டமன்றப் போராட்டம், மக்களின் அறப் போராட்டம் ஆகியவையே சரியான தீர்வு ஆகும். முன்பு சட்டமன்றத்தை அவமதித்து வெளிநடப்புச் செய்தார். இப்போது அரசியல் சட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி, எல்லை தாண்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சவால் விடுகிறார். சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா:"அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியுள்ளது சர்வாதிகாரத்தின் உச்சம். தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து அராஜகத்தை அரங்கேற்றி, அரசியல் குழப்பங்களை உருவாக்குவதற்காகவே பாஜக அரசால் அனுப்பப்பட்டுள்ள முகவரான ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் மாநில உணர்வுகளோடு விளையாடும் வகையில் அமைந்திருக்கின்றது.

அதன்ஒரு அங்கமாகவே இப்பொழுது தமிழ்நாட்டின் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை தன்னிச்சையாக நீக்குவதாக ஆர்.என்.ரவி அறிவித்திருக்கின்றார். இது அரசியல் சாசனத்தின் விழுமியங்களை காலில் போட்டு மிதிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ்-ன் நேரடிகட்டுப்பாட்டுக்கு தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்ற பேராசையோடு அவர் செயல்பட்டு வருவது இதன் மூலம் அம்பலம் ஆகியிருக்கிறது.

தமிழ்நாட்டின் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கியதாக அறிவித்துள்ள ஆளுநர் ஆர்.என் ரவியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சமாக அமைந்துள்ளது. மக்களவையின் முன்னாள் தலைமை செயலாளர் பி.டி.தி ஆச்சாரியா முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில அமைச்சரை ஆளுநர் நீக்க இயலாது. அவ்வாறு அவர் நீக்கினால் அது மாநில அரசின் நிர்வாகத்திற்கு இணையான ஒரு நிர்வாகத்தை நடத்துவதற்கு ஒப்பானது என்று தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

நாட்டில் ஒரே அரசு தான் இருக்க வேண்டும். அது ஒன்றிய அரசு மட்டுமே என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரின் சிந்தனையின் வெளிப்பாடே இந்த நடவடிக்கை. தமிழ்நாட்டை விட்டு ஆர்.என்.ரவியை விரட்டும் வரை முதலமைச்சர் தொடர் போராட்டத்தை அறிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்:"ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானதல்ல. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சீண்டி வம்புக்கிழுக்கிற சேட்டையாகும். இது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட சங்பரிவார்களின் செயல்திட்டமாகும்.

ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான வேலைத் திட்டத்தையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். இதன் மூலம் பாஜக எதிர்ப்பு நிலையிலிருந்து எதிர்கட்சிகளைத் திசைதிருப்பும் சதிமுயற்சியே ஆகும். ஆளுநர் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயற்பாடுகளைப் போலவே உள்ளது. அவருக்கு என்ன ஆனது என்கிற பரிதாபம் மேலிடுகிறது.

அவர் தனது அதிகார வரம்புகளை அறியாமல் செயல்படுகிறாரா? அல்லது உள்நோக்கத்துடன் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா?. அவரது தான்தோன்றித் தனமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'ஆளுநரை மோடியே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது' - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details