தமிழ்நாடு

tamil nadu

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் காவல்துறை இருக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 10:30 PM IST

MK Stalin: பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் காவல் துறை இருக்க வேண்டும். இந்த அரசு நலிந்தோர், எளியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் நாடக்கூடிய அரசாகும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

MK Stalin
MK Stalin

சென்னை: சென்னை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (03.10.2023) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.

அப்போது போசிய அவர்; "காலை முதல் பல்வேறு கருத்துக்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். ஒரு அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையும், சாதனையும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுதான். அமைதியான மாநிலத்தில் தான் அனைத்து துறைகளும் வளரும். நான் அடிக்கடி வலியுறுத்துவது - குற்றங்களைக் குறைத்துவிட்டோம் என்பதாக அல்லாமல், குற்றம் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்பதாக தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் காவல் துறை இருக்க வேண்டும். இந்த அரசு நலிந்தோர், எளியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் நாடக்கூடிய அரசாகும். காவல் நிலையத்தை நாடி வரும் சாமானியர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவது தான் ஒரு நல்ல ஆட்சியின் அடையாளம்.

ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் புகார் கொடுக்க வரும் மனுதாரர்களைக் கனிவுடன் நடத்துவதற்கும், அவர்களுக்கு வழிகாட்டவும் வரவேற்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பாளர்களை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்யச் சொல்ல வேண்டும். அவர்களை மற்ற பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அனைத்து காவல்துறை ஆணையர் அல்லது மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு புதன்கிழமையன்றும் குறைகேட்கும் கூட்டம் நடத்த வேண்டும். மேலும், அன்றைய தினம் நீங்கள் மனுதாரர்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து அதிக மனுக்களோ அல்லது திரும்பத் திரும்ப ஒரே மாதிரயான பிரச்சனை குறித்து தொடர்ந்து மனுக்கள் வரும் நிலையில், நீங்களே நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். காரணத்தைக் கண்டறிந்து அதனுடைய பிரச்சனையை புரிந்து, அதனை முழுமையாகத் தடுத்து, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அரசு வழக்கறிஞர்கள், அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள், உதவி இயக்குநர் அல்லது இணை இயக்குநர், குற்ற வழக்குகள் தொடர்வுத் துறை உள்ளிட்ட சட்ட அலுவலர்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள இனங்கள் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்ய வேண்டும். ஃபோக்சோ வழக்குகளில் தடய அறிவியல் துறையின் ஆய்வறிக்கை மிக முக்கிய ஆதாரம் என்பதால் அதனை விரைந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்; காவல்துறைத் துணைத்தலைவர்கள் மாதத்திற்கு ஒருமுறையும், மண்டல காவல்துறைத் தலைவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் அனைத்து வழக்குகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து பிடியாணைகளையும் நிறைவேற்றி சட்டம் ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிப்போரைக் கைது செய்து, தேவைப்பட்டால், பொது அமைதியை நிலைநாட்ட குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனைப் பெற்றுத் தந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் மீது ஒரு நம்பிக்கை ஏற்படும். ஆகையால், காவல்துறை ஆணையர் அல்லது மாவட்டக் கண்காணிப்பாளர்கள் இதனை மாதந்தோறும் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கையை அனுப்ப வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து மனுக்கள், விசாரணை அதனுடைய இனங்கள், ஆகியவற்றை காவல் நிலையங்களுக்கே சென்று ஆய்வு செய்வதோடு, அதன் தொடர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
சாதி, மத பூசல்கள் சிறிய அளவில் ஏற்படும் நிலையிலேயே கண்டறியப்பட்டு, முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
சட்டம் – ஒழுங்கு மற்றும் சாதி உணர்வுகளைத் தூண்டக்கூடிய பிரச்சினைகளில் கவனமுடன், மாவட்ட நிர்வாகத்திற்குக் கீழான அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும்.

இன்று விவாதிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் நீங்கள் ஒவ்வொருவரும், தங்கள் பொறுப்பினை உணர்ந்து, உங்களுடைய மாவட்டத்திற்குச் சிறந்த தலைமையாகச் செயல்படுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

இதையும் படிங்க:Chepauk stadium: இந்திய கிரிக்கெட்டின் 'லக்கி சார்ம்' சேப்பாக்கம் மைதானம்! அப்படி என்ன இருக்கு?

ABOUT THE AUTHOR

...view details