ETV Bharat / sports

Chepauk stadium: இந்திய கிரிக்கெட்டின் 'லக்கி சார்ம்' சேப்பாக்கம் மைதானம்! அப்படி என்ன இருக்கு?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 9:35 PM IST

Updated : Oct 3, 2023, 10:17 PM IST

Etv Bharat Exclusive World Cup 2023 : இந்தியாவில், எத்தைனையோ கிரிக்கெட் மைதானங்கள் இருந்தாலும் சென்னையில், இருக்கும் சேப்பாக்கம் மைதானம் எப்போதும் தமிழகத்தை போல் தனி சிறப்பு வாய்ந்ததாகவே காணப்படுகிறது. ரஞ்சிக் கோப்பையின் முதல் ஆட்டம் தொடங்கியது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான். அது முதல் ஐபிஎல் போட்டிகள் வரை சந்தித்த கிரிக்கெட் மைதானமாக சென்னை சேப்பாகம், எம்.ஏ. சிதம்பரம் மைதானம் காணப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டங்களை நடத்தி வரலாற்றில் இடம் பிடித்து இருக்கும் சேப்பாக்கம் மைதானம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Cricket
Cricket

சென்னை: உலக கிரிக்கெட் ரசிகர்கள், ஆவலோடு காத்திருக்கும், 'உலகக் கோப்பை கிரிக்கெட் 2023' தொடர் வரும் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை, முதல் முறையாக எந்த நாடுகளுடனும் கூட்டணி சேராமல் இந்தியா மட்டுமே தன்னந்தனியாக நடத்துகிறது.

கிரிக்கெட்டுக்கான ரசிகர்கள் இந்தியாவில் தான் அதிகம். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள், முழுவதும், இந்த உலகக் கோப்பை 2023க்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த போட்டி இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே, மும்பை, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா ஆகிய 10 நகரில் நடைபெற உள்ளது.

இதில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து என 10 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான ஏற்பாடுகள், போட்டிகள் நடைபெறும் மைதானங்களில், மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் தற்போது, மைதானத்தின் மேற்கூரை, இருக்கைகள், உணவறைகள், ஊடக அறை, கழிவறைகள் உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டு, மேலும் வீரர்களின் ஓய்வுறை, மைதானத்தின் பிரதான பிட்ச், மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதிகள் என பலவற்றில் மைதான நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.

கிரிக்கெட்டும் சேப்பாக்கமும்: கிரிக்கெட் விளையாட்டில் அதிக ரசிகர்கள் கொண்ட நாடு இந்தியா தான். எந்த சூழலிலும், இந்தியர்களின் கிரிக்கெட் உணர்வுகளைப் பிரிக்க முடியாதவையாகக் காணப்படுகிறது. இந்தியாவில், பல்வேறு மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும், சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதும் கிரிக்கெட் வரலாற்றின் பல வரலாற்று சுவடுகளை தன்னகத்தே கொண்டு இருக்கிறது.

இதன் வரலாற்றை நாம் பார்க்க போனால், ஒரு நூற்றாண்டைக் கடந்து நாம் திருப்பிப் பார்க்க வேண்டியது உள்ளது. பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.ஏ. சிதம்பரத்தின் நினைவாக இந்த மைதானத்திற்கு எம்.ஏ. சிதம்பரம் மைதானம் எனப் பெயர் வைக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக இந்த மைதானத்தை, மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மைதானம் அல்லது சேப்பாக்கம் ஸ்டேடியம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த மைதானம் 1916 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மேலும் இந்தியாவில், இருக்கும் பழமையான மைதானங்களில், இன்னும் பயன்பாட்டில், இருப்பது, இது ஒன்று மட்டும் தான் என கூறப்படுகிறது.

கிரிக்கெட் மைதானம் போல், சென்னை ரசிகர்கள் எப்போதும் ஒரு ஆரோக்கியமாக ஆட்டத்தை விரும்புவார்கள், சென்னையில், எந்த அணி விளையாடினாலும், சிறப்பான அணிக்கும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளை கொண்டாடும் வழக்கத்தை சென்னை ரசிகர்கள் கொண்டு உள்ளனர்.

வரலாற்றுச் சுவடுகள்: இந்தியா நாட்டின் புகழ்பெற்ற ரஞ்சிக் கோப்பை முதன் முதலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான், 1934 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதேபோல் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இந்தியா தன் முதல் டெஸ்ட் வெற்றியை இந்த மைதானத்தில் தான் ருசித்தது.

இதைவிட சுவாரசியம் மிகுந்த செய்தி என்னவென்றால், 1877 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு ஆட்டங்கள் மட்டுமே சமனில் (Tied) முடிவடைந்து உள்ளது. அதில் முதலாவது ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம்

மற்றொன்று நமது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டம் என்பது வியக்கத்தக்க ஒன்று. கடந்த 1986 செப்டம்பர் 16ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் சமனில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இந்த இரண்டு ஆட்டங்கள் மட்டும் தான் டையில் முடிந்து உள்ளன. அதன் பின்னர் இன்று வரையில் எந்தவொரு டெஸ்ட் போட்டியும் டை ஆனது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக ரன்கள்: விரேந்திர சேவாக் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன்கள் எடுத்தது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான். இது டெஸ்ட் வரலாற்றில் அதிவேக டிரிபிள் செஞ்சுரி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெஸ்ட் போட்டியில், அதிக ரன்கள் குவிக்கப்பட்ட மைதானம் சென்னை சேப்பாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே ஆட்டத்தில் தான், ராகுல் டிராவிட்டும் தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

பாகிஸ்தான் அணியை கொண்டாடிய இந்திய ரசிகர்கள்: இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பு உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, 1989 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடவில்லை. அதேபோல் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில், பாகிஸ்தான் அணி கிரிக்கெட் விளையாடவில்லை.

ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி, 1999ஆம் ஆண்டு இந்தியாவுக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு, இந்திய ரசிகர்கள் அனைவரும், எழுந்து நின்று கரகோஷங்கள் எழுப்பினார்கள். சிறந்த விளையாட்டு ரசிகர்கள் எப்போதும் பாகுபாடின்றி சிறந்த விளையாட்டை ஊக்குவிப்பார்கள் என்பதற்கு இது சிறந்த சான்றாக அமைந்தது. பாகுபாடின்றி சிறந்த விளையாட்டை ஊக்குவிப்பதில் சென்னை ரசிகர்கள் தனக்கே உரித்தவர்கள் என்பது சிறப்பு மிக்கதாகக் காணப்படுகிறது.

சென்னை சேப்பாகம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 8) இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளின் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த 2023 உலக கோப்பைக்கான, முதல் ஆட்டத்தை இந்தியா அணி, பெருமை வாய்ந்த சென்னை மைதானத்தில் மதியம் 2 மணிக்குத் தொடங்குகிறது.

எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டங்கள்: ஒரே நேரத்தில் 38 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், இந்த முறை இந்திய அணி விளையாடும் ஒரு ஆட்டம் உள்பட 5 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அக்டோபர் 8: இந்தியா – ஆஸ்திரேலியா,
அக்டோபர் 14: நியூசிலாந்து – வங்கதேசம்,
அக்டோபர் 18: நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான்,
அக்டோபர் 23: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்,
அக்டோபர் 27: பாகிஸ்தான்– தென் ஆப்ரிக்கா ஆகிய ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதையும் படிங்க : Cricket World Cup 2023: கே.எல்.ராகுலா? இஷான் கிஷனா? மனம் திறந்த இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர்!

Last Updated : Oct 3, 2023, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.