தமிழ்நாடு

tamil nadu

போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்ற பயணி கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 8:44 PM IST

Fake passport case: சென்னை விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா நாட்டிற்கு செல்ல முயன்ற பயணியை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

officials arrested the passenger who trying to travel to malaysia with fake passport
சென்னை சர்வதேச விமான நிலையம்

சென்னை: விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா நாட்டிற்கு செல்ல முயன்ற பயணியை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் பாட்டிக் ஏர்லைன்ஸ் (Batik Air) சென்னையில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை விமானத்தில் ஏற அனுப்பிக்கொண்டு இருந்தனர்.

அப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அகமது முஸ்தபா (44) என்பவர் பாட்டிக் விமானத்தில் மலேசியா செல்ல வந்தார். அப்போது குடியுரிமை அதிகாரிகள் அகமது முஸ்தபாவின் பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டர் மூலமாக பரிசோதித்தனர். அந்நிலையில் அவரது பாஸ்போர்ட் போலியான பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து குடியுரிமை அதிகாரிகள் அகமது முஸ்தபா பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அகமது முஸ்தபாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க:வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி தற்கொலை.. ஹெல்மேட் அணியாததால் இளைஞர் பலி உள்ளிட்ட சென்னை க்ரைம் செய்திகள்!

மேலும், சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அகமது முஸ்தபா எதற்காக போலி பாஸ்போர்ட்டில் மலேசியா நாட்டிற்கு செல்ல முயன்றார்? இவர் மீது இங்கு ஏதாவது வழக்குகள் நிலுவையில் உள்ளதா? அதனால் வெளிநாட்டிற்கு போலி பாஸ்போர்ட்டில் தப்பி செல்ல முயற்சித்தாரா? அல்லது இவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டு, போலி பாஸ்போர்ட்டில் செல்கிறாரா? இவர் இந்த போலி பாஸ்போர்ட்டை எந்த ஏஜென்ட் மூலம் வாங்கினார்? இவருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்த ஆசாமிகள் யார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின்பு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அகமது முஸ்தபாவை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் இது குறித்து அகமது முஸ்தபாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:"மண்டமேல இருக்க கொண்டைய மறந்துட்டோமே".. ஏடிஎம்மி கொள்ளை அடிக்க முயன்ற நபர் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details