தமிழ்நாடு

tamil nadu

பழிவாங்கும் என்னத்தோடு பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வெற்றி பெறுவோம் - என்.ஆர். இளங்கோ..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 2:55 PM IST

Updated : Dec 21, 2023, 3:46 PM IST

Ponmudi Case: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்குரைஞருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.

NR Elango said he was going to appeal the Ponmudi case in the Supreme Court
பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக என் ஆர் இளங்கோ தெரிவித்துள்ளார்

பழிவாங்கும் என்னத்தோடு பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வெற்றி பெறுவோம் - என்.ஆர். இளங்கோ..

சென்னை: உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில், இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, கடந்த 2016ஆம் ஆண்டு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் விடுவித்தது. இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அதே ஆண்டு மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி அன்று, வருமானத்துக்கு அதிகமாக பொன்முடி சொத்து சேர்த்தது நிரூபணமானதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். மேலும், இன்று (டிச.21) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தார். அதன்படி, இன்று அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்குரைஞருமான என்.ஆர். இளங்கோ அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “பழிவாங்கும் எண்ணத்தோடு தொடரப்பட்ட வழக்கில், கீழமை நீதிமன்றத்தில் பொன்முடிக்கு விடுதலை வழங்கப்பட்டது. ஆனால் கீழமை நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ரத்து செய்து, பொன்முடி மற்றும் அவரது மனைவியைக் குற்றவாளி என அறிவித்து, அவர்களுக்குத் தண்டனையையும் நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கியுள்ளார்.

பொன்முடியின் மனைவி பல நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய் வருமானம் டார்ன் ஓவர் செய்யப்படுவதாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது, வங்கிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த வழக்கில் திருமதி பொன்முடி வருடா வருடம் சரியாக இன்கம் டேக்ஸ் ரிடர்ன்ஸ் செலுத்தவில்லை என்ற ஒரே ஒரு காரணத்தினால் தான் அவர்களின் விடுதலை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் விசாலாட்சி மிக லாபகரமாக அவரது நிறுவனத்தை நடத்தி வந்தார்கள் என ஒப்புக்கொண்டுள்ளது. அதில், 5 கோடிக்கும் மேலாக ஒரு வருடத்தில் வியாபாரம் நடத்தப்பட்டு இருக்கிறது என்ற விவரங்களும் மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நீதிமன்றம், குறித்த நேரத்தில் வருமான வரியைத் தாக்கல் செய்யாதது தான், தனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஒரு முடிவுக்கு வந்து, விடுதலையை ரத்து செய்துள்ளது.

சரியான நேரத்தில் வருமான வரி கட்டவில்லை என உயர் நீதிமன்றம் கூறுகிறது. ஆனால், முன்னதாகவே நாங்கள் வருமான வரி கட்டியிருக்கிறோம். அந்தத் தொகை கணக்கில் உள்ளது. அதற்கான ஆதாரமும் எழுத்துப் பூர்வமாக உள்ளது. ஆனால் அதனைச் சென்னை உயர் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்தத் தகவலை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, இந்த வழக்கில் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.. அடுத்தது என்ன?

Last Updated : Dec 21, 2023, 3:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details