சென்னை:அஞ்சலக பார்சல் மூலமாக வெளிநாட்டிற்குப் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மண்டல போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் மேடவாக்கம் அஞ்சல் அலுவலகத்தில் சோதனையிட்டனர்.
அப்போது, கத்தார் தலைநகர் தோகாவிற்கு 194 கிராம் அளவிற்கு மெத்தாபெட்டமைன் பார்சல் மூலம் அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது, மேடவாக்கத்தில் வசிக்கும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 38 வயதான கிளென் தாமஸ் என்பதைக் கண்டறிந்து, அவர் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் நைஜீரியாவைச் சேர்ந்த கிளென் தாமஸ் தன் மீது எந்த குற்றமும் இல்லை என்றும், தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன் என்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று(அக்.31) போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஏ.செல்லதுரை ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, போதைப் பொருள் கடத்தியதாக கிளென் தாமசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் புதுக்கோட்டையில் 10ம் வகுப்பு மாணவன் பலி.. நடந்தது என்ன?