தமிழ்நாடு

tamil nadu

’ஒரு நாள் மழைக்கே இந்த நிலை’ - தயாநிதி மாறன்

By

Published : Aug 21, 2021, 6:25 PM IST

Updated : Aug 21, 2021, 6:32 PM IST

தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்

கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற அவல நிலை ஆட்சியால்தான், தற்போது சென்னையில் ஒரு நாள் பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியுள்ளது என மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை: சென்னையில் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டமானது இன்று (ஆக.21) சென்னை அம்மா மாளிகையில் நடைபெற்றது.

இதில் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜே. ஜெயராணி, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன்

மழைநீர் தேங்க அவல நிலை ஆட்சியே காரணம்

அப்போது அவர் பேசுகையில், "சென்னையில் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுகவை சார்ந்தவர்கள் என்பது பெருமைக்குரியது.

கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும், அவரவர் பகுதிகளில் முடிவு பெறாமல் உள்ள திட்டங்களை உடனடியாக முடித்து, மக்களுக்குத் தேவையான வளர்ச்சிப் பணிகளை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் ஒன்றிய அரசு அளிக்கும் நிதி குறித்து ஆராயும் கூட்டமாகவும் இது அமைந்தது. தற்போது வரை ஒன்றிய அரசு வழங்கிய நிதிகள், உரிய முறையில் செலவழிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளின் அவல நிலை ஆட்சியால்தான், தற்போது சென்னையில் ஒரு நாள் பெய்த மழைக்கே நீர் தேங்கியுள்ளது” என்றார்.

மழை நீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை

அதன் பின்னர் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் பேசுகையில், "3 திட்டங்களின் கீழ் சென்னையில் மழை நீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கூட்டத்திற்கு பின்னர் பேசிய தயாநிதிமாறன், ககந்தீப் சிங் பேடி உள்ளிட்டோர்

அதேபோல் முடிவுபெறாத திட்டங்களை உடனடியாக முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் பருவமழைக்கு முன்னதாகவே, சென்னையில் மழை நீர் தேங்காத வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

தொடர் மழைக்காலத்தில் பெரம்பூர் ரயில்வே சுரங்கப் பாலம், வியாசர்பாடி கணேசபுரம் பாலம், எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப் பாதை, பட்டுலாஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை உள்ளிட்டவற்றில் இடுப்பளவு நீர் தேங்கி நிற்பது வாடிக்கையானதாகவே மாறிவிட்டது. இதில் பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நிலப்பகுதிகளின் நிலை இன்னும் மோசம்.

ஊழல் பெருச்சாளிகளின் பசிக்கு இரையான ஏரிகள்

கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ள பாதிப்பில் சென்னைவாசிகள் அனுபவித்த துயரங்கள் சொல்லி மாளாது. இருப்பினும் அதிலிருந்து அரசு, மாநகராட்சி நிர்வாகம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

கழிவுநீர் செல்ல குழி தோண்டி பெரும் குழாய்கள் பதிக்கப்பட்டு வகுக்கப்பட்ட நீர் வழிந்தோடும் திட்டமும் சுணக்கத்துடன் நிற்கிறது.

ஒரு காலத்தில் சென்னையின் மிக முக்கிய நீராதாரங்களாக இருந்த கொரட்டூர், நாராயணபுரம், பள்ளிக்கரணை, திருப்பனந்தாள், சிட்லப்பாக்கம் ஏரிகள் உள்ளிட்டவைகளின் ஆக்கிரமிப்பும் மழைநீர் தேக்கத்துக்கு மிக முக்கிய காரணியாக விளங்குகிறது.

கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்த அரிச்சுவடே தெரியாமல் ஊழல் பெருச்சாளிகளின் பசிக்கு இரையாகிவிட்டன. இனிவரும் காலங்களில் பருவமழையை எதிர்கொள்ளவுள்ளதை மனதில் கொண்டு, மழைநீர் தேங்குவதை தவிர்க்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'தொடரும் தற்கொலை - ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை விரைவில் இயற்றுங்கள்'

Last Updated :Aug 21, 2021, 6:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details