தமிழ்நாடு

tamil nadu

"நவீன மருத்துவம் உடலை ஒரு இயந்திரமாகப் பார்க்கிறது" - ஆளுநர் ஆர்.என்.ரவி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 8:37 AM IST

Governor RN Ravi: நவீன மருத்துவ அறிவியல் குணப்படுத்தும் அணுகுமுறையுடன் உடலை ஒரு இயந்திரமாகப் பார்க்கிறது என ஆயுஷ் நிபுணர்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

"நவீன மருத்துவம் உடலை ஒரு இயந்திரமாகப் பார்க்கிறது" - ஆளுநர் ஆர் என் ரவி!
"நவீன மருத்துவம் உடலை ஒரு இயந்திரமாகப் பார்க்கிறது" - ஆளுநர் ஆர் என் ரவி!

சென்னை:ஆயுஷ் நிபுணர்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை ஆளுநர் மாளிகை பாரதியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நேற்று (டிச.14) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி எனப்படும் ஆயுஷ் சிகிச்சை முறைகள் பாராட்டுக்கு உரியது. நவீன மருத்துவ அறிவியல் ஒரு குறிப்பிட்ட புள்ளி வரையே செயல்படும்.

அது சொந்தமாக சில பக்க விளைவுகளைக் கொண்ட குணப்படுத்தும் அணுகுமுறையுடன் உடலை ஒரு இயந்திரமாகப் பார்க்கிறது. பாரம்பரிய மருத்துவம் உடல் வடிவம், மனம் மற்றும் ஆன்மாவை உள்ளடக்கிய ஒரு முழுமையான அமைப்பாக உடலை எடுத்துக் கொள்கிறது.

நவீன மருத்துவத்தின் வரவுக்கு முன்பே பாரம்பரிய மருத்துவ முறைகள் மனிதகுலத்தை நீண்ட காலமாக பராமரித்து வந்தன. பாரம்பரிய மருத்துவம் நீண்ட கால பரிசோதனை மற்றும் அனுபவத்திற்குப் பிறகு வந்தன. நவீன அறிவியலால் அது ஒருபோதும் மறைக்கப்படவோ, ஓரங்கட்டப்படவோ கூடாது.

நவீன அறிவியலின் வரவு என்பது, பாரம்பரிய மருத்துவம் உட்பட பாரம்பரிய ஞானம், பழமையான பயனுள்ள சில வைத்திய முறைகள் ஆகியவற்றை மறைக்கும் வகையில் உள்ளது, இது மனிதகுலத்திற்கு நல்லதல்ல. நாம் நவீன அறிவியலை ஏற்றுக் கொண்டாலும், பாரம்பரிய ஞானத்தை இழக்க முடியாது.

நவீன மருந்துகளில் சில வரம்புகள் உள்ள பகுதிகள் உள்ளன. ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அனுபவித்த பாரம்பரிய மருத்துவம் ‘நவீன மருத்துவம்’ வழியைக் காட்டாதபோது நமக்கு உதவியிருக்கிறது” என்றார். பின், பாரம்பரிய மருத்துவத்தின் அறிவியல் பூர்வ சாத்தியம் பற்றி பேசுகையில், “அது பல சவால்களை எதிர்கொள்கிறது. அதை உறுதிப்படுத்த ஆழமான ஆராய்ச்சி அவசியம்.

நமது மக்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலனில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் பங்கும் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சிகள், ஆயுஷ் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் சந்தைப் பங்கை சுமார் ரூ.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

கரோனா தாக்கத்துக்குப் பிறகு, பாரம்பரிய மருத்துவத்துக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இயற்பியல் ரீதியாக மனித உடலை அது ஒரு பௌதிக அமைப்பாக மட்டும் பார்த்ததால், அதற்கு சில வரைமுறைகள் இருந்தது . இன்று யோகா ஒரு சர்வதேச பயன்பாடாக மாறியிருக்கிறது. யோகா மற்றும் தியானம் உடல் ஆரோக்கியத்தை பேணுகின்றன என்பதை விளக்குவது கடினம்.

ஆனால், அதை புரிந்து கொள்ள, நாம் அவற்றின் தத்துவத்துக்குள் ஆழமாகச் செல்கிறோம். ஒரு மனிதனின் நல்வாழ்வு என்பது, ஒரு நோய்க்கான சிகிச்சை மட்டுமல்ல, நோய் வராமலேயே தடுப்பதாக இருக்க வேண்டும். இந்தியா தனக்கென சொந்த அடையாளத்துடன் வளர்ந்து வருவதற்கு இதுவே சரியான தருணம்.

இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வெளிப்படுவதாக மட்டுமல்லாமல், அதன் பாரம்பரிய விழுமியங்களிலும் மீண்டும் வளர்ச்சி பெற்று வருகிறது. அதனால்தான், பிரதமர் நமது பாரம்பரியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார்.

நமது பாரம்பரியத்தைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறையே நமது பாரம்பரியம். இன்று, உலகளாவிய நெருக்கடியை தீர்க்க உலகுக்குள்ள ஒரே நம்பிக்கையாக இந்தியா உயர்ந்து நிற்கிறது. அந்த நெருக்கடிகளில் முக்கியமானவை உடல்நலம் மற்றும் நல்வாழ்வாகும்.

பெருந்தொற்று காலத்தில் நாம் இந்த நெருக்கடியை அனுபவித்தோம். ஆயுஷ் மற்றும் நமது பாரம்பரிய மருத்துவ முறையின் பங்கு முக்கியமானது. நிபுணர்கள், ஆயுஷ் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள், தங்கள் துறைகளில் அதிக ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட வேண்டும்‌” என்றார்.

இதையும் படிங்க:சூர்யகுமார் சதம்.. விக்கெட் வேட்டையில் குல்தீப் யாதவ் - அபார வெற்றி பெற்று டி20 போட்டியை டிராவில் முடித்த இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details