தமிழ்நாடு

tamil nadu

ஆன்லைன் கேம் மோகம்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சித்தப்பா மகன் கைது!

By

Published : Feb 16, 2023, 9:31 AM IST

ஆன்லைன் கேம் விளையாட்டு மூலம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தும், சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தும் மிரட்டி வந்த சிறுமியின் உறவினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆன்லைன் கேம் மோகத்தில் ஆழ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உறவினர் கைது!
ஆன்லைன் கேம் மோகத்தில் ஆழ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த உறவினர் கைது!

சென்னை:சென்னையில் 16 வயது மகளுடன் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். அதேநேரம் அவரது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டபோது, சிறுமியை அவருடைய சித்தப்பா வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

அப்போது சித்தப்பாவின் மகன், சிறுமியிடம் பழகி செல்போனில் பப்ஜி விளையாட்டை பதிவிறக்கம் செய்து கொடுத்து, அதில் விளையாட சொல்லிக் கொடுத்துள்ளார். மேலும் அது மூலமாக ரகசியமாக சாட்டிங்கும் செய்து வந்துள்ளார். அப்போது பப்ஜி விளையாட்டில் சிறுமி மூழ்கியதால், அதைப் பயன்படுத்திய அவர், அந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் சிறுமியின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்தும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் சிறுமியின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி உள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமி, தாயிடம் கூறினால் கண்டிப்பார்கள் என்ற பயத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்த நபரிடம் கெஞ்சியுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இளைஞர், தொடர்ச்சியாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் தான் பாலியல் தொந்தரவு செய்வதை பெற்றோரிடம் தெரிவித்தால், உன் மீதும், உன் தாய் மீதும் ஆசிட் அடித்து விடுவேன் என மிரட்டி, சிறுமிக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

தொடர்ந்து தான் பாலியல் தொந்தரவு கொடுப்பதை யாரும் அறிந்து விடக்கூடாது என்பதற்காக பள்ளிக்கூடம் செல்லக்கூடாது எனவும், எந்த உறவினரிடமும் பேசக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சிறுமியை மிரட்டி வைத்திருந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்தது, அவருடைய தாய்க்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் இது தொடர்பாக விசாரணை செய்தபோது சிறுமி எந்த விதமான பதிலும் கூறாமல் இருந்துள்ளார். எனவே சிறுமியின் தாய், தனது தோழியிடம் உதவி கேட்டுள்ளார். அவர் சிறுமியை தனியாக அழைத்து விசாரணை செய்தபோது, சிறுமி நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இதனையடுத்து முதல் முறையாக கடந்த 2021ஆம் ஆண்டு அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் தொடர்பாக காவல் ஆய்வாளர் அமுதா விசாரணை செய்யாமல் புகார்தாரரிடம் சமாதானம் பேசி அனுப்பி உள்ளார். அதன் பிறகு 2022ஆம் ஆண்டு மீண்டும் அப்போதைய துணை ஆணையரிடம் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்புச் சட்ட பிரிவு துணை ஆணையர் சியாமளா தலைமையிலான காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தனர்.

ஆனால் அப்போது ஆய்வாளர் அமுதா, இந்த புகார் தொடர்பாக சிறுமி நீதிமன்றத்தில் முறையான பதில் கூறவில்லை என்றால், நீங்கள்தான் சிறைக்கு செல்ல வேண்டும் எனவும், ஊடகங்களில் தெரிய வந்தால் உங்கள் சிறுமியின் பெயர் மற்றும் புகைப்படம் அனைத்தும் வெளியே சென்று விடும் எனவும் பயமுறுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி உள்ளார். இதனை கவனத்தில் கொண்ட உயர் நீதிமன்றம், கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்ததை அனைத்தும் ஒப்பிட்டு பார்த்து, சிறுமியின் சித்தப்பா மகன் குற்றம் செய்திருப்பது உறுதி என தெளிவுபடுத்தி அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் 10 நாட்களுக்கு பிறகு, அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை கைது செய்துள்ளனர். அதேபோல் பெண் குழந்தைகள் விஷயத்தில் புகார் அளித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் சமரசம் பேசி, பல்வேறு விதமாக பயமுறுத்தி அலட்சியமாக செயல்பட்ட பெண் காவல் ஆய்வாளர் அமுதா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவரின் பெற்றோர், பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் ஹிஜாவு நிறுவனத்தின் மிகப்பெரிய நிதி மோசடி விவகாரத்தில் பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து ஏமாற்றிய தரகர்கள் எனவும், அதனால் தங்களுடைய பண பலத்தை பயன்படுத்தி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் தடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இதையும் படிங்க:மனநலம் பாதித்த பெண்களுக்கு பாலியல் தொல்லை; தனியார் ஆசிரமத்தில் இருந்தவர்கள் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details