தமிழ்நாடு

tamil nadu

"ஆளுநர் ரவியே நீங்கள் யார்..?" - நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிர மேடையில் கர்ஜித்த உதயநிதி!

By

Published : Aug 20, 2023, 8:03 PM IST

Dmk hunger strike against neet exam: நீட் தேர்வு தேவை என்றால், தமிழகத்திற்கு பாஜக என்ற கட்சியே தேவையில்லை என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் ஆர்.என்.ரவி நிற்க தயாரா? என சவால் விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் (NEET Exemption Bill) நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்தும் இன்று (ஆக.20) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "உண்ணாவிரப் போராட்டத்தில் நான் அமைச்சராக மட்டுமில்லாமல், நீட் தேர்வால் இறந்துபோன இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் அண்ணனாக கலந்து கொண்டுள்ளதாக உருக்கமாக தெரிவித்தார். அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அமைச்சராக இருக்கக் கூடியவர் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது எனக் கூறியதாகவும், ஆனால் பொறுப்பைவிட மாணவர்களின் கல்விதான் முக்கியம் என்பதால் இங்கே நாம் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறோம் என்றார்.

'ஆளுநர் ரவியே நீங்கள் யார்..? நீட் விவகாரத்தில் முடிவெடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா? நீங்கள் வெறும் ஒரு போஸ்ட் மேன்' என்றும் கடுமையாக விமர்சித்தார்.முதலமைச்சர் கூறுவதை குடியரசு தலைவரிடம் கொண்டு சேர்ப்பது மட்டும்தான் உங்களுடைய வேலை என்றார். அவர் பெயர் ஆர்.என்.ரவி கிடையாது என்றும் ஆர்.எஸ்.எஸ்.ரவி என்று கூறிய அவர், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஏதோ ஒரு தொகுதியில் போட்டியிடுங்கள், திமுகவின் கடைகோடி தொண்டனை வைத்து உங்களை தோற்கடிப்போம் என்றும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு சவால் விடுப்பதாக தெரிவித்தார்.

நீட் தேர்வு ரத்து செய்யும் வரை ஓயமாட்டம்:உங்களுடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் தமிழக மக்களிடம் சொல்லுங்கள். நாங்கள் சொல்வதை எல்லாம் நீங்கள் செய்தால் நீட் தேர்வுக்கு ஆதரவாக நாங்களே வருகிறோம் என்றார். ஆளுநரை எதிர்த்து கேள்வி கேட்ட அம்மாச்சியப்பன் மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அம்மாச்சியப்பன் வேலைக்கு ஏதாவது பங்கம் விளைவித்தால் நாங்கள் சும்மாவிட மாட்டோம் என்றார். 'நீட் தேர்வு ரத்து செய்வோம்' என்ற வாக்குறுதிக்காக முழுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.

மாணவர்கள் பொறுமையாக இருக்கவும்:அதிமுக ஆட்சி காலத்தில் நீட் தேர்வு குறித்து அனுப்பப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியதை அப்போது இருந்த ஆட்சியாளர்கள் கூறவில்லை. திமுக ஆட்சி வந்த பின், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளதாக கூறினார். நீட் தேர்வை ஒழித்தால் மட்டுமே மாணவர்கள் மருத்துவர்களாக ஆக முடியும் என்றும் ஆகவே, அதை ஒழிக்காமல் திமுக அரசு ஓயாது என்றும் இதுவே அதற்கான ஆரம்பப் போராட்டம் என்றார். மாடு பிடிப்பதற்காக போராட்டம் நடத்துகிறோம்; மாணவர்கள் உயிரிழப்பதற்காக போராட்டம் நடத்த மாட்டோமா என்ன? என்று கூறிய அவர் மாணவர்கள் இந்த விவகாரத்தில் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நீட் தேர்வு தான் முக்கியம் என்றால் பாஜகவே தேவையில்லை:பொது தேர்வு முடிவுகள் வரும்பொழுது மாணவர்கள் உயிரிழப்பது என்பது இயல்பு எனவும் அதனால், திமுக உண்ணாவிரதப் போராட்டம் இருப்பது வீண் எனவும் பாஜகவில் உள்ள தலைவர் ஒருவர் கூறியதாக பேசிய அவர், இறந்துபோன மாணவர்கள் பொது தேர்வால் உயிரிழந்தவர்கள் அல்ல; நீட் தேர்வால் உயிரிழந்தவர்கள் என்றார். உங்களுக்கு நீட் தேர்வு தேவை என்றால், தமிழகத்திற்கு பாஜக என்ற கட்சியே தேவையில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இது தொடர்ந்து கொண்டே போனால் அதிமுகவையும், பாஜகவையும் தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் மதுரையில் நடக்கும் அதிமுக மாநாட்டில் ஒன்றிய பாஜக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் போட உங்களால் முடியுமா? என்று அதிமுகவிற்கு சவால் விடுத்தார்.

பிரதமர் மோடி வீடு முன் போராட அதிமுகவிற்கு அழைப்பு:டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பு நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி அமர்ந்து போராட்டம் நடத்த எடப்பாடி பழனிசாமி அதிமுக பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்றும் அப்படி, நீட் தேர்வை ரத்து செய்யப்பட்டால் அதற்கு முழு காரணம் நீங்கள்தான் என நாங்களே கூறுவோம் என்றார். உங்களிடம் வெட்கம், மானம், சூடு, சொரணை இதையெல்லாம் எதிர்பார்ப்பது கஷ்டம் தான் என்று கடுமையாக சாடினார்.

காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: ஆளுநரை எதிர்த்து அதிமுகவினர் ஒரு மூச்சாவது விட்டு இருப்பார்களா?. மோடியும், அமித்ஷாவும் பிசைந்து வைத்திருக்கிற களிமண்ணாக தான் அதிமுகவினர் இருப்பதாக கடுமையாக விமர்சித்தார். மேலும் பேசிய அவர், நீட் தேர்வுக்கான ரகசியம் என்னவென்றால் பாஜக ஆட்சி அகற்றிவிட்டு காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவரும் பட்சத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதற்கான வேலையை நீங்கள் செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

கண்ணீர் வடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:முன்னதாக உண்ணாவிரதத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்த அரியலூர் மாணவி அனிதா தொடர்பான குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது, இந்த குறும்படத்தை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்ணீர் வடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவத்திற்கு இதுவே காரணம் - பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேட்டி...

ABOUT THE AUTHOR

...view details