சென்னை:மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் முடியும் நிலையில் இன்று (பிப்.) மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.59 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் 97.07% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள், கடைசி நாளான இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரத்துறையில் உள்ள முறைகேடுகளை சீரமைப்பதற்காக மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இதன் மூலம் மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் முடியும் என மின்சார வாரியம் மற்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கானப் பணிகளை கடந்த ஆண்டு நவ.15ஆம் தேதி மின்சார வாரியம் தொடங்கியது. இதற்காக 2000-க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் வீட்டு மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் மானியம் உள்ளது.