தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முழு ஆடியோவை வெளியிடத் தயார்: மிரட்டும் அண்ணாமலை!

By

Published : Apr 30, 2023, 5:03 PM IST

Updated : Apr 30, 2023, 5:19 PM IST

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முழு தொலைபேசி உரையாடலை வெளியிடத் தயார் என்று, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai
அண்ணாமலை

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 100-வது வார உரையின் ஒலிபரப்பை, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா ஆகியோர் சென்னை நடுக்குப்பம் பகுதியில் பார்வையிட்டனர்.

பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகம், புதுச்சேரியில் 40 இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தை எடப்பாடி பழனிசாமியும், நானும் பாஜகவின் தேசிய தலைமையிடம் முன்வைத்தோம். அது நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால் எந்த கட்சி, எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை இப்போது பேச வேண்டிய அவசியமில்லை.

கூட்டணி தொடர்பாக அதிமுக தலைவர்களுடன் இணைந்து பாஜகவின் தேசியத் தலைவர்களைச் சந்தித்துள்ளோம். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோமா என்பதை அந்தச் சந்திப்பின் மூலமும், சந்திப்பின்போது வெளியான புகைப்படங்களை அடிப்படையாக வைத்தும் ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம். அதிமுக தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த திசையில் செல்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஊழலுக்கு எதிரான பாஜகவின் நிலைப்பாடு எப்போதும் மாறாது. ஊழலுக்கு எதிராக பாஜக எப்போதும் போராடும். அதுகுறித்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அனைவரும் பார்ப்பீர்கள். கட்சித் தலைவர்கள் எங்களுக்கு முக்கியம் கிடையாது. ஊழல் யார் செய்திருந்தாலும் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. இன்னும் 9 மாதத்தில் 'என் மண், என் மக்கள்' நடைபயணத்தில் அது தெரியவரும்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைக் காட்ட வேண்டிய தேவையும், கட்டாயமும் எங்களுக்கு இருக்கிறது. ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஒருபடி கூட பின்வாங்க மாட்டோம். தொடர்ந்து முன்னால்தான் அடி வைப்போம். யார் ஊழல் செய்திருந்தாலும் அதுகுறித்து வெளியிடுவோம். கலைஞர் தொலைக்காட்சியில் தனக்கு பங்கு இருந்ததை கனிமொழி ஒத்துக் கொண்டுள்ளார். தற்போது அவருக்கு பங்கு இல்லை என்று கனிமொழி கூறியுள்ளார். 2 மாதங்களுக்கு முன்புவரை தனக்கு பங்கு இருந்ததை அவர் ஒத்துக் கொண்டுள்ளார். பங்குகளை விற்ற பணம் எங்கு சென்றது? அனாதை ஆசிரமத்துக்கு அந்த பணத்தில் சோறு போட்டாரா?

தொலைபேசி ஆடியோ விவகாரத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எந்த தவறும் செய்யவில்லை. அவர் தந்துள்ளது ஒப்புதல் வாக்குமூலம் தான். ஒருவேளை அந்த ஆடியோ தவறானது என்று என் மீது வழக்கு தொடர்ந்தால் நிதி அமைச்சரின் தொலைபேசி உரையாடல் குறித்த ஒரிஜினல் ஆடியோவை வெளியிட நான் தயார். எந்த ஆய்வகத்திற்கும் அதை பரிசோதனைக்கு உட்படுத்தலாம்.

பொதுநலனுடன் பொதுவெளியில் யாருடைய ஆடியோ பதிவையும் வெளியிடலாம் என உச்ச நீதிமன்றமே கூறியள்ளது. நாங்கள் அவரது தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்டோ , ஸ்டிங் ஆபரேசன் முறையில் பதிவு செய்தோ வெளியிடவில்லை. ஆடியோ குறித்து திமுகவினர் புகாரளித்தால் எங்கே, யாரிடம் பேசப்பட்டது என்ற விவரத்தை வெளியிடுவோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் இருக்க வேண்டும், இருக்க கூடாது என்பதை முடிவு செய்யும் அனுமதியும், அருகதையும் மாநில தலைவர்களுக்கு இல்லை. கூட்டணி கட்சியினரிடம் பேசி அதை முடிவு செய்வது பாஜக தேசிய தலைமை தான். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி அதிமுகதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கூட்டணியின் முகமாக பிரதமர் தான் இருக்கிறார். அதிமுக தலைவர்களுடன் அறைக்குள் பேசிய தகவலை நான் வெளியிட்டால் அது சரியாக இருக்காது.

பாஜக மாநில தலைவராக என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரதமரும், அமித்ஷாவும் என்னிடம் கூறியுள்ளனர். பிரதமரும், அமித்ஷாவும் கூறிய பாதையில் காரிய கர்த்தனாக நான் ஏற்று பயணிக்கிறேன். முதலமைச்சரின் மெட்ரோ முதல்கட்டப் பணி ஊழல் தொடர்பாக சிபிஐயிடம் நான் புகாரளித்து விட்டேன். நான் மட்டுமின்றி தனிநபர்கள், நிறுவனங்கள் என மேலும் 6 நபர்களும் அதுகுறித்து புகாரளித்துள்ளனர். 296 பக்கங்களில் எனது வாழ்க்கை குறித்த, வங்கி விவரங்களை வெளியிட்டுள்ளேன். திமுகவினர் தங்களது வங்கி விவரங்களில் ஒரு வரியையாவது வெளியிடுவார்களா?

ஜி- ஸ்கொயர் நிறுவனத்தில் தொடர்ந்து 6 நாள் வருமான வரி சோதனை நடக்கிறது என்றால் அந்தளவிற்கு தரவுகள் கிடைத்துள்ளது என்று அர்த்தம். உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பை நான் 2 ஆயிரம் கோடி ரூபாய் என குறைவாக வெளியிட்டு விட்டதாக அவர் வருத்தத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன். இளவரசனான அவருக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் என்று சொத்து மதிப்பை சொல்லியிருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மலேசியாவில் இருந்து சென்னைக்கு 23 பாம்புகளை கடத்தி வந்த பெண் பயணி! அதிர்ந்து போன அதிகாரிகள்

Last Updated :Apr 30, 2023, 5:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details