சென்னை:நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப். 19ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று (பிப். 22) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆவடி மாநகராட்சியில் மொத்தம் 59.13 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. அந்த வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குப் பட்டாபிராம் அருகே தனியார் கல்லூரியில் தொடங்கியது.
ஆவடியில் பால்வளத்துறை அமைச்சரின் மகன் அமோக வெற்றி
பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா ஆவடியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஆவடி மாநகராட்சி 4ஆவது வார்டில் மொத்தம் 1,781 வாக்குகள் உள்ளன. இதில் மொத்தம் 910 வாக்குகள் பதிவகியுள்ளன. இந்த வார்டில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த வார்டில் திமுக சார்பில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்களின் மகன் எஸ்.என். ஆசிம் ராஜா, 755 வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். 626 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெறும் 129 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.