தமிழ்நாடு

tamil nadu

"புதிய மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணைய அறிக்கையை ஏற்கமாட்டோம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 6:02 PM IST

Updated : Oct 5, 2023, 8:02 PM IST

Minister Ma Subramanian: தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிமுறையால் தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைப்பத்தில் எழுந்துள்ள சிக்கல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் எடுத்து கூற உள்ளோம் எனவும், தமிழ்நாட்டிற்கு புதிய மருத்துவக் கல்லூரிகளே வேண்டாம் என்பது போன்ற அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை:ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என கூறிய பிரதமர் மோடி, தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிமுறையால் தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைப்பத்தில் எழுந்துள்ள சிக்கல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் எடுத்து கூற உள்ளோம் எனவும், தமிழ்நாட்டிற்கு புதிய மருத்துவக் கல்லூரிகளே வேண்டாம் என்பது போன்ற அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், போதுமான மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளில் குறைகள் இருந்தால் அதனை நிவர்த்திச் செய்வோம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தாய், சேய் நல மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக சிங்கப்பூர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் என்ற சிங்கப்பூர் அமைப்புடன் இணைந்து இரண்டாம் கட்ட பயிற்சி திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.5) தொடங்கிவைத்தார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேசிய மருத்துவ ஆணையம் இந்தியாவில் இளநிலை மருத்துவப்படிப்பில் புதிய மருத்துவக்கல்லூரிகளை உருவாக்குவதற்கான விதிமுறைகளை 2023 ஆகஸ்ட் 16 ஆம் தேதி தேசிய அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், 'தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல் படி ஏற்கனவே உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இருக்க வேண்டிய வசதிகளையும், புதியதாக துவக்கப்பட உள்ள மருத்துவக்கல்லூரிகளில் இருக்க வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள், மருத்துவப் பிரிவுகள், மருத்துவ ஆய்வகம், படுக்கை வசதிகள், நோயாளிகளின் வருகை, அறுவை சிகிச்சை குறித்த விபரங்களும் இடம்பெற வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

மேலும் இவ்விதிமுறைகளின் நோக்கமாக ஆண்டுதோறும் MBBS மாணவர் சேர்க்கைக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ நிறுவனத்தில் (சுயநிதி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் கல்லூரி) குறைந்தபட்ச தங்குமிட வசதிகள், கற்பித்தல் தொடர்புடைய மருத்துவமனைகள், கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவக் கல்லூரி துறைகளில் உள்ள உபகரணங்கள் உள்ளிட்டவையையும் இடம்பெறும்' என்றார்.

மேலும் பேசிய அவர், 'இந்த விதிமுறைகள் 2024-25 கல்வியாண்டு முதல் நிறுவப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்குப் பொருந்தும். புதிய இளங்கலை மருத்துவக் கல்வி கல்லூரிகளை நிறுவுவதற்கான விண்ணப்பங்கள் 50 ,100, l50 இடங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். 2024-2025 கல்வியாண்டிலிருந்து அனுமதிக்கப்பட்ட, MBBS மாணவர்களின் சேர்க்கையைத் தொடர தகுதிபெறும். 2024-25 ஆம் ஆண்டிலிருந்து 150 MBBS மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரும் கல்லூரிகள் சேர்க்கைக்கான அனைத்து விதிமுறைகளையும் நிறைவு செய்திருக்க வேண்டும். 2023-24 கல்வியாண்டுக்கு முன்னர் 200 அல்லது 250 இடங்களை பெறுவதற்கு விண்ணப்பித்தும், அதைப் பெற தவறிய கல்லூரிகள், தங்கள் முந்தைய விண்ணப்பத்தில் ஒருமுறை மட்டும் 2024-25ஆம் கல்வியாண்டில் துவங்குவதற்கு கேட்கலாம். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு மருத்துவக் கல்லூரியில் 100 MBBS இடங்கள் என்ற விகிதத்தைப் பின்பற்ற வேண்டும்.

அதில் அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ள 10 லட்சம் மக்களுக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற விகிதத்தை மருத்துவக் கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகள் 36, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி ஒன்றும், சுயநிதிக் கல்லூரிகள் 21, சுயாட்சி கல்லூரிகள் (Deemed Universities) 13 சேர்ந்து ஆக 71 மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது. 71 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவ இடங்கள் 11,475 ஆக இருக்கிறது.

பல்மருத்துவ இடங்கள் 2,150 ஆக உள்ளது. தமிழ்நாட்டின் மக்கள்தொகை சுமார் 8 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதனால் புதிய மருத்துவக்கல்லூரிகளை துவங்குவதில் சிக்கல் எழுந்தது. அதனைத் தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறும்போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2011 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவேண்டும் என்ற சிறப்பான அறிவிப்பை சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளது.

எனினும் புதிதாக உருவாகியிருக்கின்ற 6 மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நிலை உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் கூட இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். ஆனால் தற்போது தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Council) இந்தியாவின் தென்மாநிலங்களில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உள்ளது என்றும் எனவே புதிதாக மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படாது என்பது போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னரே மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரிடமும் இது தொடர்பான கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய பிரதமருக்கு இதுதொடர்பான கடிதம் எழுதியுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அரசு முதன்மை செயலாளர், டெல்லியில் நடைபெறும் பட்ஜட் தொடர்பான விவாத கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுள்ளார் . அவர்களிடம் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளரிடம் இந்த பிரச்சனை தொடர்பாக பேச கூறப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் கல்லூரி வேண்டாம் என்ற அறிக்கையை ஏற்கமாட்டோம்:தேசிய மருத்துவ ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட புகார்கள் சரிசெய்யப்பட்டதோடு, இதற்கு முன்பு இவ்வாணையத்தால் தெரிவித்த புகாரான தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள சிறிய குறைகளான CCTV கேமராக்கள் இல்லை என்பது போன்ற குறைகள் சரிசெய்யப்பட்டு கடிதங்கள் கொடுக்கப்பட்டன. மருத்துவக்கல்லூரிக்கு தேவையான ஆசிரியர்கள், மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்னர். ஆனால், தமிழ்நாட்டிற்கு புதிய மருத்துவக் கல்லூரிகளே வேண்டாம் என்பது போன்ற அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்தார்.

இதையும் படிங்க:"2024 தேர்தல் திமுக vs பாஜக தான்" - அண்ணாமலை அதிரடி

Last Updated :Oct 5, 2023, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details