சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிரட்டிச் சென்ற மிக்ஜம்" (Michaung) புயலின் தாண்டவத்தால், சென்னை நகரமே உருக்குலைந்தது என்றாலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளால் சென்னை மாநகரம் மெது மெதுவாக அதன் இயல்பு நிலைக்கு மீண்டெழுந்து வருகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் வெள்ள நிவாரண நிதியாக 450 கோடி ரூபாயை மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னதாக தெரிவித்தார். மிக்ஜாம் புயலானது சென்னையை விட்டு ஆந்திராவில் கரையைக் கடந்தாலும், அதன் பாதிப்பின் தடங்கள் மக்களின் மனதில் இன்னும் நிறைந்துள்ளது.
தொடர்ந்து 4வது நாளாக மீட்புப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வட சென்னை பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இதில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளே பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகின. தொடர்ந்து பல்வேறு தமிழ்நாடு அரசு சார்பில், நடவடிக்கை மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் கே.என்.நேரு மீட்புப் பணியை ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 65 நிவாரண முகாம்களில் 14 ஆயிரத்து 268 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் வாகனங்களின் மூலம் இன்றைய தேதியில் (08.12.2023) இதுவரை 47 லட்சத்து 79 ஆயிரத்து 222 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
மேலும், மாநகராட்சி சார்பில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 290 ரொட்டி பாக்கெட்டுகள், 7 லட்சத்து ஆயிரத்து 941 குடிநீர் பாட்டில்கள், 8 லட்சத்து 47ஆயிரத்து 633 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 51 ஆயிரத்து 733 பால் பவுடர் பாக்கெட்டுகள், 14 ஆயிரத்து 574 பால் பாக்கெட்டுகள், 61 ஆயிரத்து 380 கிலோ அரிசி மற்றும் ஆயிரத்து 739 கிலோ பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரத்து 512 மரங்கள் விழுந்துள்ளன. அவற்றில் இதுவரையில், ஆயிரத்து 303 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 209 மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 22 சுரங்கப்பாதைகளும் தற்போது மழைநீர்த்தேக்கமின்றி போக்குவரத்திற்கு பயன்பாட்டில் உள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு மழைக்கால நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், கடந்த 1-ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடமாடும் மருத்துவ முகாம்கள் மற்றும் நிலையான மருத்துவ முகாம்கள் என ஆயிரத்து 60 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 77ஆயிரத்து 663 நபர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆயிரத்து 162 மோட்டார் பம்புகள் மழைநீர் வெளியேற்றுவதற்காக தயார் நிலையில் உள்ளது. மழைநீர் தேங்கியிருந்த 363 இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் 306 இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு விட்டது. மீதமுள்ள 57 இடங்களில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது" என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இதையும் படிங்க:நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் விலக்கு - செல்லூர் கே.ராஜூ கோரிக்கை!