தமிழ்நாடு

tamil nadu

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதியப் படிப்புகள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

By

Published : Feb 6, 2023, 4:40 PM IST

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கான புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இவற்றிற்கு ஆன்லைன் மூலம் மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதியப் படிப்புகள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சென்னை: கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி முறையில் ஆன்லைன் படிப்புகளுக்கு வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என துணைவேந்தர் கீதா லட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பயிற்சி மற்றும் தகவல் மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமி, 'தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி முறையில் சான்றிதழ் படிப்பு, இணைய வழி சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு, வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு ஆகிய நான்கு படிப்புகளை வழங்கி வருகிறது. இந்தப் படிப்புகளில் 60க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு www.tnau.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதியதாக நகர்ப்புறங்களில் வாழ்பவர்களுக்கான சான்றிதழ் பாடங்கள், பாதுகாக்கப்பட்ட குடில்களில் தோட்டக்கலை, செடிகள், வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணையவழித் தொழில்நுட்பங்கள், வேளாண்மையில் ஆளில்லா வான்கலம் தொழில்நுட்பங்கள் ஆகிய பட்டயப் படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவை, 10ஆம் வகுப்பு கல்வித் தகுதிப்பெற்றவர்களுக்கு 6 மாதங்களுக்கான சான்றிதழ் படிப்பு தமிழ் வழியில் 44 பிரிவுகளில் 2500 ரூபாய் பயிற்சிக் கட்டணத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல், பல்கலைக்கழகத்தில் உள்ள திறன் மிகுந்த பேராசிரியர்கள் மூலம் தயார் செய்யப்பட்ட பாடத்திட்டங்களை கொண்டு ஆன்லைன் மூலம் அலங்காரத் தோட்டம் அமைத்தல், மூலிகை மற்றும் நறுமணப் பயிர் உற்பத்தி, மண்புழு உரம் தயாரித்தல், வீடு மற்றும் மாடித் தோட்டம் அமைத்தல், வீட்டுத் தோட்டத்தில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அங்கக வேளாண்மைக்கான இடுப்பொருட்கள் என 6 பாடப்பிரிவுகளில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 2 மாதங்கள் ஆங்கில வழியில் பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும், வேளாண்மைக்கு தேவையான இடுபொருட்கள் விற்பனை செய்வதற்கான கடைக்கு அனுமதி பெறுவதற்கு வேளாண் இடுபொருள்கள் பட்டயப்படிப்பு முடிக்க வேண்டும். அப்போதுதான், கடை வைக்க உரிமம் வழங்கப்படும். இந்தப்படிப்பிற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வழங்கப்படும். இதற்கு கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். விவசாயத்தில் பயிர் செய்யும்போது ஏற்படும் நோய்களை கண்டறிந்து அதற்குரிய மருந்துகளை அளிக்கும் வகையில் இந்தப் படிப்பில் நேரடியாகவும் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், ஓராண்டு பட்டயப்படிப்புகளாக பண்ணைத் தொழில்நுட்பங்கள், தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், மூலிகை அறிவியல், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள், பண்ணைக்கருவிகள் மற்றும் அதன் பராமரிப்பு உள்ளிட்ட 12 வகையான படிப்புகள் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ் மொழியில் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதியதாக நகர்ப்புறங்களில் வாழ்பவர்களுக்கான சான்றிதழ் பாடங்கள் 10 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் துவக்கப்படுகிறது. அதில், அலங்காரத் தாேட்டம் அமைத்தல், நாற்றங்கால் பாராமரிப்புத் தொழில்நுட்பங்கள், மாடி மற்றும் வீட்டுத் தோட்டம் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை ஆகிய பாடப்பிரிகள் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ் வழியில் வழங்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக ரூ.3000 மட்டும் செலுத்த வேண்டும்.

நகர்ப்புறங்களில் மாடி வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்கான இடத்தில் தேவையான காய்கறிகளை பயிர் செய்து பயன்படுத்த முடியும். மேலும், அலுவலகங்கள் அமைக்கப்படும் இடங்களில் காலியாக உள்ள இடங்களில் தோட்டங்கள் அமைத்தும் பராமரிக்க முடியும். இந்தப் படிப்புகளால் வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், சுய தொழிலும் அதிகரிக்கும்.

மேலும், விவசாயத்திற்கு ஆளில்லா வான்கலம் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ட்ரோன்களை இயக்குவதற்கு சான்றிதழ் அளிக்கும் வகையில் அதற்கான பயிற்சியும் வழங்கி வருகிறோம். ட்ரோன்களை பயன்படுத்தி பூச்சிக் கொல்லி மருந்து தெளித்தல், பயிர்களுக்கான ஊட்டச்சத்துகளை போட முடியும்.

வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தநிலைப் படிப்புகளில் 18 ஆயிரம் பேர் படிக்கின்றனர். அவர்களில் 50 சதவீதத்திற்கு மேல் பெண்கள். சுய உதவிக் குழுக்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, வேளாண்மை தொழில்நுட்டபத்தின் மூலம் தொழில் முனைவோர்களாக இருந்து வருகின்றனர். மேலும், இந்தப்படிப்புகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்திலும், www.tnau.ac.in என்ற இணையத்திலும் தெரிந்து கொள்ளலாம்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "கிராமி விருதுகள் 2023" - விருது பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல்!

ABOUT THE AUTHOR

...view details