தமிழ்நாடு

tamil nadu

'மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் திமுக அரசு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்' - கமல்

By

Published : Aug 29, 2021, 4:57 PM IST

கடந்த ஆட்சியில் அதிமுக அரசு மாற்றுத்திறனாளிகளின் குரலுக்கு செவி சாய்க்காமல் இருந்துவிட்டது என்றும், தற்போதுள்ள திமுக அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் கோரிக்கை
கமல் கோரிக்கை

சென்னை: மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் தமிழ்நாடு அரசு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஆக.29) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடி வருகின்றனர்.

நடப்பு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவிருக்கிறது.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் பிற சங்கங்கள் நீண்ட நாள்களாக பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து வருகின்றனர். அதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்பட வேண்டும். ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3,000 ரூபாயும், கடுமையான மாற்றுத் திறனாளிகளுக்கு 5,000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் இது நடைமுறைக்கு வரவேண்டும்.
  • அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஐந்து விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
  • தனியார் வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
  • பார்வைக் குறைபாடு உடையவர்கள் கல்வி கற்க தஞ்சாவூர், திருச்சி, சென்னை போன்ற மாவட்டங்களில் உயர்நிலை, மேல்நிலை என 10 சிறப்புப் பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க மாவட்டங்கள்தோறும் சிறப்புப் பள்ளிகள் உருவாக்க வேண்டும்.
  • அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரை, திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும்படியான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் பயணம் செய்யும் உதவியாளர்களும் அரசின் சாதாரணப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற சலுகையானது, நகரப் பேருந்துகளில் மட்டுமல்லாது அனைத்துப் பேருந்துகளுக்கும் விரிவாக்கப்பட வேண்டும்.
  • தொழில்முனைவோராக விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • மனநலன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்டங்களில் கல்வி நிலையங்கள், பராமரிப்பு இல்லங்கள் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உதவி எண் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட வேண்டும்.
  • பெரும் பாதிப்புகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவும் வகையில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்பட வேண்டும்.

கடந்த ஆட்சியில் அதிமுக அரசு மாற்றுத்திறனாளிகளின் குரலுக்குச் செவிசாய்க்காமல் இருந்துவிட்டது துரதிர்ஷ்டவசமானது. மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016இன் படி மாற்றுத் திறனாளிகளுக்கு உரியவற்றை செய்து கொடுக்க ஆவன செய்ய வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் - பெயர் மாற்ற அரசாணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details