சென்னை:கடந்த 2006-2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011ஆம் ஆண்டு டிசம்பரில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டது.
அதனை எதிர்த்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டு, இந்த முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில், முகாந்திரம் இருந்தால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், இது சம்பந்தமாக விசாரணை நடத்த அனுமதி அளித்து, 2018ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்தது.
அதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கில் தன்னை இணைக்கக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் D.கிருஷ்ணகுமார், P.B.பாலாஜி அமர்வில் இன்று (செப்.26) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவற்றை பெற முடியாது என்பதால், தனக்கு நீதி வழங்கும் வகையில், இந்த மேல் முறையீட்டு வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்க்க வேண்டும் என ஜெயவர்த்தன் தரப்பில் வாதிடப்பட்டது.