தமிழ்நாடு

tamil nadu

கருணை அடிப்படிப்படையில் வேலை கேட்போருக்கு கருணை காட்டுங்கள் - சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்குபிடி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 9:17 AM IST

Compassionate appointment: நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் கருணை மனுக்கள் மீது வேலை வழங்குவதற்கான காலவரம்பு நிர்ணயிப்பது குறித்தும், மாநில அளவிலான மூப்பு (seniority) அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்ய குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Compassionate  appointment
கருணை அடிப்படையில் பணி நியமனங்கள்

சென்னை:போக்குவரத்துத் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி, பணியின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி அரசுக்கு விண்ணப்பித்தும், 14 முதல் 15 ஆண்டுகளாக மனு பரிசீலிக்காததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி "ஒரு நிமிட தாமதத்தைக் காட்டிலும் 3 மணி நேர முன்கூட்டிய விரைவு மேலானது என்ற ஷேக்ஸ்பியரின் வரிகளைச் சுட்டிக்காட்டி, கருணை அடிப்படையில் பணி வழங்கும் திட்டம் என்பது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக மனிதாபிமான அடிப்படையில் கை கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது.

கருணை அடிப்படையில் பணி வழங்க 14 முதல் 17 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலைக்கு வாரிசுகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். கருணை அடிப்படையில் பணி வழங்கும்போது மாவட்ட அளவிலும், துறை ரீதியாகவும், மூப்பு (seniority) பின்பற்றப்பட்டு வருவதால் தான் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, மாநில அளவில் மூப்பு பட்டியல் தயாரித்து கருணை அடிப்படையில் பணி கோருபவர்களை நியமிக்கலாம்.

கருணை அடிப்படையில் பணி கோரும் போது காலி இடம் இருந்தால் துறைத் தலைவர்களே, 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டுமென விதிகளில் கூறப்பட்டு இருந்தாலும், உரிய காலி இடம் இல்லை என்றால் 3 மாதங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்க வேண்டுமென சட்டத்தில் உள்ளது.

ஆனால், மாவட்ட ஆட்சியர் எத்தனை நாட்களில் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டுமென்பதற்கு எந்த கால நிர்ணயமும் இல்லை என்பதால், கால நிர்ணயம் செய்யும் வகையில் அரசுப் பணிகளுக்கான விதிகளில் தேவையான திருத்தங்களை செய்ய இரு மாதங்களில் குழு அமைத்து ஆராய்ந்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

மேலும், வழக்கு தொடர்ந்தவர்களுக்கு 6 வாரங்களில் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். பணி வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 மாதங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:புதிய தலைமைச் செயலக கட்டட வழக்கு: முதலமைச்சர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு வாதம்!

ABOUT THE AUTHOR

...view details