தமிழ்நாடு

tamil nadu

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து யாரையாவது நீக்க முடியுமா? - உயர் நீதிமன்றம் கேள்வி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 1:32 PM IST

O Panneerselvam Appeal: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பெயர் மற்றும் கொடியைப் பயன்படுத்த உரிமை உள்ளதா என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

madras high court adjourned O Panneerselvam Appeal against ban on use of aiadmk party symbol and flag
ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு ஒத்திவைப்பு

சென்னை:அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதையடுத்து, அதிமுக கட்சியின் லெட்டர் பேட், பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், அதற்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வதுக்கு நவம்பர் 6ஆம் தேதி அன்று இடைக்கால தடை விதித்து, வழக்கை நவம்பர் 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகம்மது சபீக் அமர்வில் முதல் வழக்காக இன்று (நவ.16) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், அதனடிப்படையில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் கட்சி, சின்னம் மற்றும் கொடியைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது சரிதான். மேலும், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டி நீதிபதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. எந்த ஆதாரங்களையும் ஆராயாமல் உத்தரவு பிறப்பக்கப்படவில்லை” என கேள்வி எழுப்பினர்.

பின்னர், பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஒரு வழக்கில் தீர்ப்பு வரும் வரை நிவாரணம் பெற உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. அதனால், தடையை ரத்து செய்ய கோருகிறோம். வழக்கின் தொடக்கத்திலேயே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த ஆவணங்களோ, சுய விளக்கமோ தங்களிடம் கேட்கப்படவில்லை. தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன் விளக்கமளிக்க பன்னீர்செல்வம் தரப்புக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துவிட்டு, இறுதி உத்தரவுக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது தங்களுக்கான சட்ட வாய்ப்புகளை பறிப்பதாகும். மூன்று விதமான அதிமுக கொடிகள் உபயோகிக்கப்பட்டு வருகிறது. அதில் எதை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்படவில்லை.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், பன்னீர்செல்வம் தரப்பினர் சட்ட ரீதியான நிவாரணம் பெற உரிமை உள்ளது என உயர் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அதனால், முழுமையாக அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கருத முடியாது. எந்த வழக்கிற்கும் எதிர்தரப்பு நிவாரணம் பெற வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால், இந்த வழக்கில் எந்த வாய்ப்புகளும் தங்களுக்கு வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “2022 ஜூலை 11ஆம் தேதி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கட்சி சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் மூன்று முறை பன்னீர்செல்வம் தரப்பு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியது. ஆனால், தொடர்ந்து விளக்கம் அளிக்காததால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எந்த அடிப்படையிலும் ஒருதலைபட்சமாக நீதிமன்றம் உத்தரவிடவில்லை. நீதிமன்றங்கள் வழங்கிய சில நிவாரணங்களை பன்னீர்செல்வம் தரப்பினர் தவறாக பயன்படுத்துகின்றனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை நீதிமன்றங்கள் உறுதி செய்த பின், கட்சியின் உரிமையை எப்படி கோர முடியும்?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதுபோன்ற வழக்குகளை அனுமதிக்க கூடாது. அனுமதித்தால் கட்சியினரிடையே தேவையற்ற குழப்பம் ஏற்படும். அதனால், பன்னீர்செல்வம் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் பன்னீர்செல்வம் அதிமுக கொடியை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் பன்னீர்செல்வம் எப்படி உரிமை கோர முடியும்? பன்னீர்செல்வம் அதிமுக கட்சியில் இருந்து யாரையாவது நீக்க முடியுமா? அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: விளக்கம் கேட்டு மசோதாக்களைத் திருப்பி அனுப்பிய ஆளுநர்..! சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டத் தமிழக அரசுத் திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details