ETV Bharat / state

விளக்கம் கேட்டு மசோதாக்களைத் திருப்பி அனுப்பிய ஆளுநர்..! சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டத் தமிழக அரசுத் திட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 12:52 PM IST

Updated : Nov 16, 2023, 2:00 PM IST

ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்ட நாட்களாகக் கிடப்பிலிருந்த 10 மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டுத் திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் தமிழக அரசுத் தரப்பில் சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
ஆளுநர்

சென்னை: தமிழக அரசுத் தரப்பில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருந்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் தொடர்ந்து அரசியல் ரீதியான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால், பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட, தமிழக அரசு தரப்பில் இருந்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதனால், சமீபத்தில் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

நவம்பர் 10ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது நீண்டகாலமாக மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பது கவலை தெரிவித்த நீதிபதி, மசோதாக்களை நீண்ட காலமாகக் கிடப்பில் போடக்கூடாது என அறிவுறுத்தினார். இந்நிலையில் நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருந்த மசோதாக்களில் சில விளக்கங்களைக் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இதன்படி,

  • சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா
  • தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா ஆகிய மசோதாக்கள் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மீண்டும் ஒரு சிறப்புச் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி இந்த மசோதாக்களை மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் எனத் தமிழக அரசும் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த சிறப்புச் சட்டமன்றம் கூட்டப்படும் என்றும் அதில் இந்த மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 18ஆம் தேதி சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கான முயற்சி நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில் அதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு நீட் தேர்வு விலக்கு பெறுவதற்காகத் தமிழக அரசுத் தரப்பில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாவையும் ஆளுநர் இதேபோல் விளக்கம் கேட்டு அனுப்பி இருந்தார். அப்போதும் இதேபோல் சிறப்புச் சட்டமன்றம் கூட்டப்பட்டு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10,11 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

Last Updated :Nov 16, 2023, 2:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.