சென்னை: கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில், ரூ.6.74 கோடி மதிப்பீட்டில் அதிநவீன இருதய கேத்லேப் (Cath lab) ஆய்வகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜன.4) தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கடந்தாண்டு ஜூன் 15ஆம் தேதி அன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைக்கப்பட்ட பின்னர் பல்வேறு உட்கட்டமைப்புகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ சேவைகள் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.
சென்னை மக்களுக்கு மட்டுமல்லாது, பிற மாவட்ட மக்களுக்கும் இந்த மருத்துவமனை சிறந்த மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. தினந்தோறும் உள்நோயாளிகள் 200 பேர், புறநோயாளிகள் 800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு மருத்துவமனை திறக்கப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து பெறும் வளர்ச்சியினை, இந்த மருத்துவமனை 6 மாத காலத்தில் அடைந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் இதுவரை 687 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. 88,589 பேர் இதுவரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்கு முன்பு டபுள் பலூன் எண்டோஸ்கோபி (Double Ballon Endoscopy) மருத்துவ உபகரணம் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக Auto MRI என்ற அதிநவீன மருத்துவ உபகரணமும் இங்கு தொடங்கி வைக்கப்பட்டது.
இன்று ரூ.6.74 கோடி செலவில் அதிநவீன கேத்லேப் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஆஞ்சியோகிராம், ஸ்டன்ட், பிறவி குறைபாடு உள்ள இருதய ஓட்டைகள் அடைப்பது, பேஸ்மேக்கர் பொருத்துவது, இருதய வால்வுகள் சரிசெய்வது போன்ற சிகிச்சைகள் இந்த மருத்துவமனையிலேயே மேற்கொள்ள முடியும்.
சென்னையில் பல்வேறு பெரிய அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூர் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளில் மட்டுமே இந்த கேத்லேப் வசதி உள்ளது. தற்போது கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், தென் சென்னை மற்றும் வட சென்னை மக்களும் பயனடைவார்கள்.