தமிழ்நாடு

tamil nadu

ஓய்வூதியர்களுக்கு அஞ்சல் துறை மூலம் வாழ்நாள் சான்றிதழ்!

By

Published : May 31, 2022, 11:02 PM IST

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்தானது.

ஓய்வூதியர்களுக்கு அஞ்சல் துறை மூலம் வாழ்நாள் சான்றிதழ்!
ஓய்வூதியர்களுக்கு அஞ்சல் துறை மூலம் வாழ்நாள் சான்றிதழ்!

சென்னை: அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கு (IPPB) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் முன்னிலையில் கையெழுத்தானது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மாநில அரசின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் சுமார் 7,15,761 ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வருடாந்திர நேர்காணலிற்காக (Mustering) சமர்ப்பிக்கின்றனர்.

மேலும் தற்போது, ​​ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அவர்களது விருப்பங்களின் அடிப்படையில் மூன்று முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வருடாந்திர நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலாவதாக ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாக சென்று பதிவு செய்தல், இரண்டாவதாக, தபால் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தல் மற்றும் மின்னணு விரல் ரேகை சாதனத்தைப் பயன்படுத்தி ஜீவன் பிரமான் இணையம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் (DLC) சமப்பித்தல்.

மேலும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் வருடாந்திர நேர்காணலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது ஜூலை முதல் செப்டம்பர் 2022 வரையிலான மாதங்களில் நடைபெறும் வருடாந்திர நேர்காணலில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களின் வயதினைக் கருத்தில் கொண்டும் அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (IPPB) மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று ஜீவன் பிரமான் இணையத்தின் வழியாக மின்னணு வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கான சேவையை உள்ளடக்கிய ஐந்து முறைகளிலான வருடாந்திர நேர்காணலை நடைமுறைப்படுத்த தமிழக அரசானது உத்தரவினை பிறப்பித்துள்ளது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது (IPPB) ஒரு மின்னணு வாழ்நாள் சான்றிதழுக்கு ரூ.70 என்ற கட்டணத்தில் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று சேவைகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களுக்கு இச்சேவையை வழங்குவதற்காக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் (IPPB) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

இதையும் படிங்க :மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டிக்குத் தேர்வான 72 வயது மதுராந்தகம் யூத்!

ABOUT THE AUTHOR

...view details