ETV Bharat / state

மிஸ்டர் ஆசியா ஆணழகன் போட்டிக்குத் தேர்வான 72 வயது மதுராந்தகம் யூத்!

author img

By

Published : May 31, 2022, 7:54 PM IST

மாலத்தீவில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான ஆணழகன் போட்டிக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயது போட்டியாளர் தேர்வாகியுள்ளது மாவட்டத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் குறித்த சிறு சாதனை தொகுப்பைக் காணலாம்.

மிஸ்டர் ஏசியா ஆணழகன் போட்டிக்குத் தேர்வான 72 வயது இளைஞர்
மிஸ்டர் ஏசியா ஆணழகன் போட்டிக்குத் தேர்வான 72 வயது இளைஞர்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர், ரத்தினம். இவருக்கு வயது 72. மதுராந்தகம் பகுதியிலேயே உடற்பயிற்சிக் கூடம் ஒன்றினை வைத்து நடத்தி வருகிறார். சிறுவயது முதலே உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட இவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து 72 வயதிலும் கட்டுடலுடன் காணப்படுகிறார்.

பல போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் தற்போது ஆசிய அளவில் நடைபெறும் ஆணழகன் போட்டிக்கு 60 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் இந்தியாவின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மே மாதம் 22ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்வில் பங்கு கொண்டு தேர்ச்சிபெற்றுள்ளார். வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மாலத்தீவில் நடைபெறும் 54ஆவது ஆசிய ஆணழகன் போட்டிக்கு ரத்தினம் தகுதி பெற்றுள்ளது மதுராந்தகம் பகுதியையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ரத்தினம் கூறும் போது, ”தனக்கு ரோல்மாடலாக தற்போதைய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உள்ளார். உடல் ஆரோக்கியம் குறித்த சைலேந்திரபாபுவின் சமூகப் பதிவுகள் தன்னைப் பெரிதும் கவர்ந்தது. வாய்ப்பு கிடைத்தால் டிஜிபி-யை சந்தித்து வாழ்த்துபெறுவேன்’’ என ரத்தினம் கூறியுள்ளார்.

ஆசிய ஆணழகன் போட்டிக்குத் தேர்வாகி வந்த ரத்தினத்திற்கு, மதுராந்தகம் பகுதிவாழ் மக்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர். மாலத்தீவைத் தொடர்ந்து தாய்லாந்தில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியிலும், 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவில், ரத்தினம் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது என்பது கூடுதல் தகவல்.

இவரது சாதனை குறித்து இவருடைய உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சிபெறும் மாணவர்கள் கூறும்போது, ”தங்களது மாஸ்டர் ரத்தினம் கண்டிப்பாகப் போட்டியில் வெற்றிபெற்று, இந்தியாவின் சார்பாக தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக மதுராந்தகத்திற்கும் பெருமை சேர்ப்பார் என்று தாங்கள் உறுதியாக நம்புகிறோம்” எனக் கூறுகின்றனர்.

மிஸ்டர் ஏசியா ஆணழகன் போட்டிக்குத் தேர்வான 72 வயது இளைஞர்

இதே போட்டிக்கு, 50 முதல் 60 வயது வரை உள்ள பிரிவினரில், 80 கிலோ எடைக்கு மேல் உள்ள பிரிவில், காவல் துறையைச் சேர்ந்த ஸ்டீஃபன் ஜி.ஆர்.ஜோஸ் என்பவரும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போதாது - ஓட்டுநர்கள் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.