தமிழ்நாடு

tamil nadu

"உதயநிதியால் பலர் ஈர்க்கப்பட்டு திமுக இளைஞரணியில் சேர்கின்றனர்" - அமைச்சர் கே.என்.நேரு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 3:55 PM IST

Updated : Nov 26, 2023, 5:58 PM IST

KN Nehru Speech: சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற கே.என்.நேரு, இளைஞரணியின் செயலாளராக உதயநிதி பொறுப்பேற்ற பின்னர் இளைஞர்கள் அதிகளவில் கட்சியை நோக்கி ஈர்க்கப்படுவதாக தெரிவித்தார்.

KN Nehru said youth are attracted to the party after udhayanidhi stalin took charge as the Youth wing Secretary
கே.என்.நேரு பேச்சு

சென்னை:தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 72 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இளைஞர் அணி சார்பாக சேலத்தில் நடைபெறவிருக்கும் மாநாடிற்கு ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேருவை நியமனம் செய்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "இரண்டு முக்கிய முன்னெடுப்புகளுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்காக 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டு, மண்டல வாரியாக பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஐந்து மண்டலங்களில் மிகப்பெரிய மாநாடுகளைப் போல இந்த கூட்டங்களை நடத்தி முடித்து இருக்கிறோம். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் அடுத்தகட்ட பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க கூடிய அளவுக்கு கழகம் தயாராக இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.

அமைச்சர் உதயநிதி இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு ஏராளமான இளைஞர்கள் கழகத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவர் செல்லும் ஊர்களில் எல்லாம் புதிதாக இளைஞர்கள் கழகத்தை நோக்கி வருகிறார்கள். கழக அரசும் இளைஞர்களுக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டி வழங்கி வருகிறது. இதுவும் இளைஞர்களை திமுக நோக்கி வர வைக்கிறது.

இந்த இளைய பட்டாளத்தை கட்டுக்கோப்பாகவும், நம்முடைய திராவிடக் கொள்கை கொண்டவர்களாகவும் ஆக்குவதற்காகத் தான் இளைஞரணி மாநாட்டை நடத்த வேண்டும் என்று தலைவர் உத்தரவிட்டார்கள். 2007ஆம் ஆண்டு இளைஞரணியின் முதல் மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது.

சேலத்தில் நடைபெறக்கூடிய இளைஞர் அணி மாநில மாநாடு, அமைச்சர் உதயநிதி தலைமையில் ஒரு நாள் மாநாடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறேன். 3 லட்சத்திற்கும் மேலான இளைஞர்கள், எழுச்சியும் உணர்ச்சியும் ஊட்டும் இந்த மாநாட்டிற்கு வர உள்ளனர்.

மேலும், திமுகவின் இரு வண்ணக் கொடியை மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஏற்றி வைக்கிறார். மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றுகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாடு முக்கிய மாநாடாகவும், இளைஞரணி மாநாடு கழக வரலாற்றில் மட்டுமல்ல தமிழ்நாடு வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் முக்கியமான மாநாடாக அமையும்" என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

மேலும், இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலையில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாகவும், இந்த மாநாட்டை பொருத்தவரை எதிர் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “நாம் கைகாட்டுபவர் பிரதமராக 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Last Updated : Nov 26, 2023, 5:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details