ETV Bharat / state

“நாம் கைகாட்டுபவர் பிரதமராக 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 2:17 PM IST

DMK District Secretaries meeting: சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால், நாம் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

CM Stalin said at DMK District Secretaries meeting we have to win 40 constituencies to elect the Prime Minister
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட 72 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராக வருகிறது. இந்நிலையில், திமுக சார்பாக அனைத்து தொகுதியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சியளிக்கும் கூட்டங்களும் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இரண்டாவது இளைஞர் அணி மாநில மாநாடு குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடிய நிலையில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாகவும், மாவட்டச் செயலாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி விடியல் பயணம் வரை மகளிருக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். இத்திட்டங்கள் மகளிரிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. செல்லுமிடங்களில் எல்லாம் மகளிரின் உண்மையான அன்பைக் காண்கிறேன். இனி எந்தக் காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை.

உதயநிதி இளைஞரணியின் செயலாளராக 2019ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பிறகு, அணியின் பணிகள் பன்மடங்கு வேகம் எடுத்திருக்கிறது. இன்றைய தேதியில் 25 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட வலுவான படையாக இளைஞரணி திகழ்கிறது. பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் அளவில் மட்டுமின்றி வார்டு, கிளை அளவிலும் அணியை வலுவாகக் கட்டமைத்திருக்கிறார்கள்.

234 தொகுதிகளில் 280 பாசறைக் கூட்டங்களை நடத்தி, இளைஞரணியினரைக் கொள்கை உணர்வாளர்களாக மாற்றியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை. இளைஞர்களையும், புதிய வாக்காளர்களையும் ஈர்க்கும் எஃகு கோட்டையாக திமுக திகழ்கிறது என்பதை இந்த மாநாட்டின் மூலமாக நிரூபித்துக் காட்ட வேண்டும்.

மேலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தலா ஆயிரம் இளைஞர்களாவது கலந்து கொள்ளும் பிரமாண்டமான மாநாடாக இந்த மாநாட்டை அமைத்திடல் வேண்டும். குறைந்தபட்சம் 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாநாடாக அமைத்திட வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால், நாம் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் விவசாயிகளுக்கு எதிரான கொடுங்கோல் சட்டங்கள்" - திமுகவை காட்டமாக விமர்சித்த பி.ஆர்.பாண்டியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.