சென்னை:ஸ்ரீநகரைச் சேர்ந்த ஷாஸாதி பாத்திமா (33) என்ற பெண்ணுக்கு இதய அறைகளின் சுவர் தடிமனாக மாறுவதால் இதயம் இறுக்கம் அடையும் வகையிலான, ரெஸ்ட்டிரிக்டிவ் கார்டியோமயோபதி (Restrictive cardiomyopathy) என்ற பிரச்னை காரணமாகத் தீவிர இதய செயலிழப்பு பிரச்னை ஏற்பட்டது.
இதற்கு மிக விரைவாக இதய மாற்று அறுவைசிகிச்சை செய்வதுதான் தீர்வாக இருந்தது. அவரது உடல் நிலை மோசமடையவே கடந்த 2021 டிசம்பர் 31ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்ட்ரோப்ஸ் மற்றும் இதர மருந்துகளை அளித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில், 2022 ஜனவரி 26ஆம் தேதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்களை உறவினர்கள் தானமாக வழங்க முன் வந்தனர்.
இதைத் தொடர்ந்து கிரீன் காரிடார் (Green Corridor) உருவாக்கப்பட்டு தானமாகப் பெறப்பட்ட இதயம் 350 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மிக விரைவாக கொண்டு வரப்பட்டு, அதிக ஆபத்து கொண்ட இதய மாற்று அறுவைசிகிச்சை ஷாஸாதி பாத்திமாவுக்கு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. தற்போது அவர் உடல் நலம் தேறி, நலமுடன் உள்ளார்.
உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செயல்பாடுகளை அரசு கண்காணிக்கிறது
மேலும் இவரின் அண்ணன் கூலி வேலை செய்து வருகிறார். எனவே, ஷாஸாதி பாத்திமாவின் மருத்துவச் செலவை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்றுக் கொண்டது. தன்னுடைய பங்குக்கு உதவியாக, மேல் குறிப்பிட்ட அந்த தனியார் மருத்துவமனை மிகக்குறைந்த கட்டணத்தில் இந்த அறுவை சிகிச்சையை செய்தது.