தமிழ்நாடு

tamil nadu

கரிசல் காட்டு இலக்கிய படைப்பாளி செயப்பிரகாசம் காலமானார்

By

Published : Oct 24, 2022, 7:24 AM IST

கரிசல் காட்டு இலக்கிய படைப்பாளி செயப்பிரகாசம் காலமானார்

புகழ் பெற்ற கரிசல் காட்டு இலக்கிய படைப்பாளி செயப்பிரகாசம் காலமானார்.

சென்னை:காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளை படைத்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் (எ) சூரியதீபன் நேற்று (அக் 23) இயற்கை எய்தினார். இவர் தனது படைப்பு மற்றும் செயல்பாடுகளில் சமூக அக்கறை சார்ந்து வெளிப்படுவதில் கவனம் கொண்டவர்.

எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில், சமூகத்தின் மனசாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன். சமகாலப் படைப்புக் கலைஞனான இவர், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழம் உடையவர்.

கவித்துமான மொழியில் இவரது தொடக்க காலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பிண்ணிப் பிணைந்தவாறு இவரது கதைகளில் வெளிப்பட்டன. இப்படிப்பட்ட செயப்பிரகாசம், தனது முதுகலை தமிழ் படிப்பை மதுரை தியாகராசர் கல்லூரியில் முடித்தார்.

1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவப் போராளியாய்ச் செயலாற்றினார். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த 10 மாணவர்களில் இவரும் ஒருவர். 1968ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றினார்.

பின்னர் 1971ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறைப் பணி மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். தாமரை, கணையாழி, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கதைசொல்லி, ஆனந்த விகடன், காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், மனஓசை போன்ற இதழ்களில் இவரது படைப்புக்கள் வெளி வந்துள்ளன.

இதில் கவிதை, கதை, கட்டுரை மற்றும் உருவகக் கதைகள் எனப் பலவற்றை இவர் படைத்துள்ளார். இவரது படைப்புகள் கீற்று, பொங்கு தமிழ் போன்ற இணைய இதழ்களில் தொடர்ந்து வெளிப்படுகின்றன. ‘மனஓசை’ என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.

1981 முதல் 1991 வரை வெளியான மனஓசை இதழ், பத்து ஆண்டுகள் தமிழிலக்கிய உலகில் முன் மாதிரிப் பதிவுகளை உருவாக்கியது. இந்த இதழ் ஏற்கனவே இயங்குகிற சமூக நீரோட்டத்துடன் செல்லாமல் எதிர்க் கருத்தியலை வைத்து நடை போட்ட இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி என்னும் அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். 2008ல் ஈழத்தின் மீதான யுத்தம் உச்சத்திலிருந்த நேரத்தில், அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு (ஈழம்) எழுதி வெளிவந்த “இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் இலங்கையின் இராசதந்திரம்” என்னும் சிறு வெளியீடு, பத்தாயிரம் படிகள், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் இவரது முயற்சியில் மறுபதிப்பு செய்து, இலவசமாக தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.

2002ல் ஈழத்தில் ‘அமைதி ஒப்பந்த காலம்’, 2002 அக்டோபரில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில்’ பங்கேற்றார். கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, திரை இயக்குநர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் ஆகிய ஐந்து பேரும் பங்கேற்ற அந்நிகழ்வில், ஒவ்வொரு நாள் நிறைவிலும் ஒருவர் உரையாற்றினர்.

மூன்றாம் நாள் நிகழ்வில் இவருடைய உரை நிகழ்ந்தது. ’மானுடத்தின் தமிழ்க்கூடல்‘ மாநாட்டின் தொடர்ச்சியாய் ஈழத்தில் பத்து நாட்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களின் தொகுப்பாக ”ஈழக் கதவுகள்” என்னும் நூல் வெளியானது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக விளாத்திக்குளத்தில் வசித்து வந்தார்.

இவருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று காலமானார். இவரது இறப்பிற்கு இலக்கிய ஆசிரியர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ராமரின் ஆட்சியே எனது ஆட்சிக்கு உத்வேகம் - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details