தமிழ்நாடு

tamil nadu

"மாவட்ட சுகாதாரத் திட்டத்தில் செவிலியர்கள் நியமனத்தில் குளறுபடி" - எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கம்!

By

Published : Mar 5, 2023, 7:09 PM IST

மாவட்ட சுகாதாரத் திட்டத்தின் மூலம் எம்ஆர்பி செவிலியர்களை நியமனம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாகவும், நியமிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணி வழங்கப்படாமல் இருப்பதாகவும் எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மாவட்ட சுகாதாரத் திட்டத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மாவட்ட
மாவட்ட

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காலத்தில், மருத்துவ அவசர தேவைகளுக்காக எம்ஆர்பி தேர்வில் தகுதி பெற்ற செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். பெருந்தொற்று காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த எம்ஆர்பி செவிலியர்களை கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்ஆர்பி தேர்வு எழுதி, இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி பணியமர்த்தப்பட்ட தங்களை பணி நீக்கம் செய்ததை ஏற்க முடியாது என்றும், தங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பின்னர் செவிலியர்களுக்கு தற்காலிகப் பணி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இறுதியாக மாவட்ட சுகாதாரத் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மாவட்ட சுகாதாரத் திட்டத்தின் கீழ் செவிலியர்கள் நியமனத்தில் குளறுபடி நடப்பதாக எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் உதயகுமார் இன்று(மார்ச்.5) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 2020ஆம் ஆண்டு எம்ஆர்பி மூலம் கரோனா பெருந்தொற்றின்போது சுமார் 6,000 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதில், 3,000 செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டது. மீதமுள்ள 3,000 செவிலியர்களை, கடந்த 2022 டிசம்பர் மாதம் 30ஆம் தேதி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, 6 மாத சம்பள நிலுவைத்தொகை வழங்கப்படாமலும் பணியில் இருந்து நீக்கினர். கரோனா பெருந்தொற்று காலத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி எங்களை பணி நீக்கம் செய்தனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிரந்தரப்பணி வழங்குவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தையில் உறுதியளித்திருந்தார். ஆனால், சுகாதாரத்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை பணி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தும், நிதித்துறை ஒப்புதல் வழங்காமல் இருந்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம்.

இதைக் கண்டித்து பல்வேறு கட்ட போராட்டமும் நடத்தினோம். ஆனால், அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பிறகு அனைவருக்கும் மாவட்ட சுகாதாரத் திட்டத்தின் மூலம் பணி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பணிநிரந்தரம் மற்றும் தற்காலிக முறையில் மாவட்ட சுகாதார திட்டத்தின் மூலம் செவிலியர்கள் நியமனத்தை எதிர்த்தும், 6 மாத சம்பள நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கக் கோரியும், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது காலியாக உள்ள 4,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களில், மாவட்ட சுகாதாரத் திட்டத்தின் கீழ் செவிலியர்களை அவசர கதியில் பணி நியமனம் செய்து வருகின்றனர்.

அவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களுக்குப் பணி வழங்கப்படவில்லை. இதில் பல்வேறு குளறுபடி நடப்பதாக சங்கத்திற்கு தொடர்ந்து புகார் வருகிறது. இது செவிலியர்களிடடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, உடனடியாக 6 மாதச் சம்பள நிலுவைத்தொகையினை வழங்க வேண்டும், மாவட்ட சுகாதாரத் திட்டம் மூலமாக தற்காலிக முறையில் செவிலியர்களை பணி நியனம் செய்யவதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை" - ஜாக்டோ ஜியோ!

ABOUT THE AUTHOR

...view details