ETV Bharat / state

"ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை" - ஜாக்டோ ஜியோ!

author img

By

Published : Mar 5, 2023, 6:06 PM IST

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

உண்ணாவிரதம்
உண்ணாவிரதம்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை: புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட சரண்டர் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே தேதியிலிருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், உயர் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவற்றில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று(மார்ச்.5) தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், திமுக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மயில், "திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத்திட்டம் ரத்து செய்யப்படும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிவருகிறார். ஆனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதேநேரம் கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகளைப் பறித்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆசிரியர்களின் குழந்தைகள் உயர்கல்விக்கான தொகையை 50ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, 3 ஆண்டிற்கு ஒரு முழு உடல் பரிசோதனை போன்ற திட்டங்களை வரவேற்கிறோம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை ஒப்பந்தம் பெற்ற யுனைடெட் இந்தியா நிறுவனம் வேறு நிறுவனத்திற்கு மறு ஒப்பந்தம் அளித்துள்ளது. இதனால், சிகிச்சை பெறும் செலவில் 20 சதவீதம் மட்டுமே தருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது போல் முழு உடல் பரிசோதனைத் திட்டம் தேவையில்லை, மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். பிற மாநிலங்களில் புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து வருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டிலும் ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ அமைப்பில் இருந்து எந்த சங்கமும் பிரிந்து செல்லவில்லை, அவர்கள் எங்களுடன் கொள்கை ரீதியாக தொடர்ந்து பயணித்துக் கொண்டு வருகின்றனர்" என்று கூறினார்.

இதையும் படிங்க: "ஆடம்பரத்தை தவிர்த்து, புத்தகங்களை பரிசளியுங்கள்" - திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.