ETV Bharat / state

"ஆடம்பரத்தை தவிர்த்து, புத்தகங்களை பரிசளியுங்கள்" - திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்!

author img

By

Published : Mar 5, 2023, 2:11 PM IST

திமுகவினர், ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது, பட்டாசு வெடிப்பது, வெள்ளிச் செங்கோல்-வாள் வழங்குவது போன்ற ஆடம்பரத்தைத் தவிர்த்துவிட்டு, புத்தகங்களையும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளையும் தனக்கு பரிசாக வழங்க வேண்டும் என அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Minister
Minister

சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று(மார்ச்.5) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இளைஞர் அணி செயலாளராக கழக நிகழ்ச்சிகளிலும், அமைச்சராக அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யும் போது, நீங்கள் அளிக்கும் வரவேற்பைக் கண்டு நெகிழ்கிறேன். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், காட்டும் அன்பும் என்னை இன்னும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கிறது.

அதேவேளையில் அன்பை வெளிப்படுத்துவதற்கான வழியாக என்னை வரவேற்று ஃப்ளெக்ஸ் பேனர் வைப்பது, பட்டாசு வெடிப்பது, வெள்ளிச் செங்கோல்-வாள் போன்றவற்றை நினைவுப் பரிசாக வழங்குவது, மாலை அணிவிப்பது, பொன்னாடை போர்த்துவது போன்ற நடைமுறை தொடர்கிறது. இவற்றைத் தவிர்க்கும்படி பல முறை கேட்டுக்கொண்ட பிறகும், இவை தொடர்வது வருத்தமளிக்கிறது.

திமுக தலைவர் அறிவுரைப்படி, புத்தகங்களை வழங்குங்கள் எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படி நீங்கள் எனக்கு அளிக்கும் புத்தகங்களைத் தேவைப்படும் பள்ளி-கல்லூரிகளின் நூலகங்களுக்கு வழங்குகிறோம். திமுக தலைவரின் 70-வது பிறந்தநாளையொட்டி என்னுடைய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நான் முன்னெடுத்துள்ள நடமாடும் கலைஞர் நூலகத்தில் உள்ள 4 ஆயிரம் புத்தகங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் புத்தகங்கள் நீங்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கியவை.

மேலும், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு வழங்கும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை வழங்குங்கள் என்று நான் கேட்டுக்கொண்டபடி, நீங்கள் வழங்கிய அந்தப் பொருட்களை சென்னையைச் சுற்றியுள்ள பல ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளித்து மகிழ்ந்தேன்.

அதேபோல், பலரும் என்னிடம் இளைஞர் அணி அறக்கட்டளைக்கு நிதியுதவிகளை வழங்குகிறார்கள். அத்தொகையிலிருந்து பாரபட்சம் பார்க்காமல், சமூக வலைத்தளங்கள் மூலமாக மருத்துவம், கல்வி போன்ற உதவிகளைத் தேவையுள்ள ஏழை-எளிய மக்களுக்கு வழங்கி வருகிறோம்.

அப்படிக் கடந்த ஒரு மாதத்தில், நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 55 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் என 13.75 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளோம். இந்தப் பணியைத் தமிழ்நாடு முழுவதும் தொடரவுள்ளோம். ஆகவே, நீங்கள் என் மீது காட்ட நினைக்கும் அன்பை, இளைஞர் அணி அறக்கட்டளைக்கான நிதியுதவியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இளைஞர் அணி அறக்கட்டளைக்கு நீங்கள் வழங்கும் ஒரு சிறுதொகை எங்கோ ஒரு மூலையில் உதவியை எதிர்நோக்கி இருக்கும் எளியோருக்கான வாழ்வாக அமையும், வறுமைப் பின்னணியில் வாழ்வை வெல்லத் துடிக்கும் மாணவச் செல்வங்களின் கல்வியை காக்க உதவலாம்.

நீங்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கும் ஒரு புத்தகம், ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள குழந்தைக்கு அறிவின் திறவுகோலாக இருக்கலாம். மகளிர் சுயஉதவிக் குழுத் தயாரிப்புகளை வழங்கினால், தயாரிப்பவர்-பயன்படுத்துவோர் என இருதரப்புக்கும் பலனளிக்கும்.

எனவே, கழக உடன் பிறப்புகளாகிய நீங்கள், பயனற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து, தேவையானோருக்கு உதவிடும் வகையில் புத்தகங்களையும், அறக்கட்டளைக்கான நிதியுதவியையும், மகளிர் சுய உதவிக் குழுத் தயாரிப்புகளையும் மட்டுமே அன்பளிப்பாக வழங்க வேண்டும் என கோருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "2024 தேர்தல் ஒரு கொள்கை யுத்தம்" - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.