தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் நாளை முதல் அக்னி நட்சத்திரம்!

By

Published : May 3, 2022, 5:23 PM IST

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ள நிலையில் 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் 'கத்திரி' வெயில் நாளை(மே 4) முதல் தொடங்கவிருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை முதல் அக்னி நட்சத்திரம்..!
தமிழ்நாட்டில் நாளை முதல் அக்னி நட்சத்திரம்..!

சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ள நிலையில் 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் 'கத்திரி' வெயில் நாளை(மே 4) முதல் தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற மே 28ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த கால கட்டங்களில் வெயிலின் தாக்கம் இயல்பை விட இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கியதிலிருந்தே பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. பல மாவட்டங்களில் மழை பெய்தாலும், சில மாவட்டங்களில் குறிப்பாக வட மாவட்டங்களில் வெயில் 40 டிகிரியைத் தாண்டியது. இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசியதுடன், இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

பஞ்சாங்கப்படி, சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக உச்சம் பெறும் வேளையில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் இந்த காலம் 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் என சொல்லப்படுகிறது. எனினும், வானிலை ஆய்வாளர்கள் இதனை அறிவியல் ரீதியாக மறுக்கின்றனர். மேலும், இயற்கையாகவே இந்த நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் இதற்கு அக்னி நட்சத்திரம் என்னும் தனிப்பெயர் இல்லை எனவும் கூறுகின்றனர்.

இது குறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் நம்மிடம் கூறுகையில், "அக்னி நட்சத்திரம் என்ற சொல்லே வானிலை அறிவியலில் இல்லை. எனினும், கோடைகாலத்தில் மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது இயல்பானது தான். மேலும் இந்த கால கட்டங்களில் மழை பெய்வதற்கும் வாய்ப்பு உண்டு" எனத்தெரிவித்த அவர் சென்னையைப் பொறுத்தமட்டில் தற்போது மழைக்கு வாய்ப்பில்லை எனக் கூறினார்.

கத்திரி வெயில் நேரங்களில் அனல் காற்று வீசும் என்பதால் இரவில் புழுக்கம் அதிகமாகக் காணப்படும். மேலும், பகல் நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். வெப்பத்தை தணிக்க தண்ணீர், இளநீர், மோர் உள்ளிட்ட இயற்கைப் பானங்களை அருந்துவது நல்லது என்கின்றனர், மருத்துவர்கள்.

இதையும் படிங்க: ரம்ஜான் பண்டிகை: தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

ABOUT THE AUTHOR

...view details