தமிழ்நாடு

tamil nadu

ஓட்டுநர் இல்லாமல் ஓடிய அரசு பேருந்து சுவற்றில் மோதி விபத்து!

By

Published : Jan 22, 2023, 2:09 PM IST

ஓட்டுநர் இன்றி ஓடிய பேருந்து

மயிலாடுதுறையில் அரசு பேருந்து ஒன்று ஓட்டுநர் இல்லாமல் திடீரென இயங்கிச் சென்று மதில் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஓட்டுநர் இன்றி ஓடிய பேருந்து

மயிலாடுதுறை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் 79 நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல பேருந்துகள் முறையான பராமரிப்பின்றி பாதி வழியில் டயர் வெடித்தும், படிக்கட்டுகள் உடைந்தும் விபத்துகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

இந்நிலையில், இன்று காலை மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் அரசு பேருந்து, மணல்மேட்டில் இருந்து மயிலாடுதுறைக்கு வருகை தந்தது. பயணிகள் இறங்கிச் சென்ற பின்பு ஓட்டுநர் பேருந்தின் இன்ஜினை அணைக்காமல், நியூட்ரலில் வைத்து நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்றுள்ளார்.

அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் பேருந்து தானாக இயங்கத் தொடங்கியது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும், பேருந்து நிறுத்தப்பட்டு இருந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து எதிரே இருந்த சுவரில் மோதி நின்றது. இதில் சுவர் மற்றும் அதிலிருந்த இரும்பு கிரில்கள் சேதமடைந்தன. அப்போது அங்கு யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை மீட்டு அரசுப் பணிமனைக்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏழை எளியோர் பயன்படுத்தும் அரசு பேருந்துகளைச் சரி செய்து பழைய பேருந்துகளை உடனடியாக சீரமைத்து, நல்ல உதிரிப்பாகங்கள் உடன் இயக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பேருந்து படிக்கட்டு வழியே கீழே விழுந்த குழந்தை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details