தமிழ்நாடு

tamil nadu

“ரூ.5,000 கோடி என்னிடம் உள்ளது” தொழிலதிபர்களை குறி வைத்த மோசடி மன்னன் கைது!

By

Published : Mar 1, 2023, 10:45 PM IST

துபாயில் தனக்கு 5,000 கோடி ரூபாய் பணம் உள்ளதாக முக்கிய தொழிலதிபர்களை குறி வைத்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு உல்லாசமாக வாழ்ந்து வந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

“ரூ.5,000 கோடி என்னிடம் உள்ளது” தொழிலதிபர்களை குறி வைத்த மோசடி மன்னன் கைது!
“ரூ.5,000 கோடி என்னிடம் உள்ளது” தொழிலதிபர்களை குறி வைத்த மோசடி மன்னன் கைது!

சென்னை: முகப்பேரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற தொழிலதிபரிடம் ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் போலி சீல்கள் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி பிரபல துணி நிறுவனங்களின் ப்ரான்ச்சைஸ் வாங்கித் தருவதாக கூறி 2.82 கோடி ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் பிரதீக் ராதாகிருஷ்ணன் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பையில் பல தொழிலதிபர்களைத் தெரியும் எனவும், மிகப்பெரிய பிசின்ஸ் கன்சல்டண்ட் எனக் கூறி ப்ரதீக் மோசடி செய்துள்ளார். இவ்வாறு பிரதீக் சென்னையில் கைதான தகவல் வெளியானதையடுத்து, பிரதீக் ராதாகிருஷ்ணனால் மோசடிக்குள்ளாக்கப்பட்ட பல்வேறு மாநிலத்தில் உள்ள தொழிலதிபர்கள் அந்தந்த மாநிலத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக மும்பையைச் சேர்ந்த சவாரி பஜாரில் தொழில் மேற்கொள்ளும் கிருஷ்ணா தேவசி என்ற தொழிலதிபர் மற்றும் அவரது உறவினர்கள், புதிய தொழில் ஐடியாக்கள் இருப்பதாகக் கூறி 4.17 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக எல்.டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

குறிப்பாக சென்னை தொழிலதிபர் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீக் ராதாகிருஷ்ணன், சிறையில் இருந்து வெளி வருவதற்கு மும்பையில் இருக்கும் தொழிலதிபர்களிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது சில பிரச்னைகள் காரணமாக சென்னை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கறிஞர் கட்டணத்திற்காகவும், வழக்கிலிருந்து வெளி வருவதற்காகவும் பணம் கேட்டு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு மும்பைக்கு பிரதீக் ராதாகிருஷ்ணன் வராததையடுத்து விசாரித்தபோதுதான், பலரையும் இது போல் ஏமாற்றியது மும்பை தொழிலதிபர்களுக்கு தெரிய வந்துள்ளது. அதன் பின்புதான் மும்பையில் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் தனக்கு துபாயில் 5,000 கோடி ரூபாய் பல்வேறு வங்கி கணக்குகளில் இருப்பதாகவும், தொழில் ஆரம்பித்து லாபம் வந்தவுடன் அந்த பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து திருப்பித் தருவதாகவும் கூறி ஏமாற்றியுள்ளார். விரைவில் மும்பை காவல் துறையினர், சென்னை வந்து ட்ரான்சிட் வாரண்ட் மூலம் பிரதீக் ராதாகிருஷ்ணனை மும்பை அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இவர் இவ்வாறாக சம்பாதித்த பணத்தில் மும்பையிலும், துபாயிலும் வீடு கட்டி உல்லாசமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. வங்கி அதிகாரியாக கரூர் வைசியா வங்கியில் பணியாற்றிய பின் துபாய்க்குச் சென்று பிசினஸ் கன்சல்டன்ட்டாக மாறி, மும்பையில் ப்ரதீக் ராதாகிருஷ்ணன் பணியாற்றியதாகவும், அதன் மூலம் பல தொழிலதிபர்களின் நட்பை பெற்றுக் கொண்டு பண மோசடி செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.30.8 லட்சம் மோசடி - 5 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details