தமிழ்நாடு

tamil nadu

கன மழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு !

By

Published : Aug 14, 2023, 7:38 PM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இன்று மாலை பெய்து வரும் கனமழை காரணமாக விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கன மழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு !
கன மழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு !

சென்னை :மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை 3:30 மணியிலிருந்து ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த கனமழை, காற்று காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த மூன்று உள்நாட்டு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வானில் தொடர்ந்து வட்டமடித்தன.

திருச்சியில் இருந்து 62 பயணிகளுடன் சென்னைக்கு மாலை 3:45 மணிக்கு தரையிறங்க வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கொச்சியில் இருந்து 127 பயணிகளுடன் மாலை 4.20 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மைசூரில் இருந்து 58 பயணிகளுடன் மாலை 4:40 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மூன்று விமானங்கள் தொடர்ந்து வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தன.

இதையடுத்து சென்னை புறநகர் பகுதிகளில் மழை மற்றும் காற்று குறைந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துப் பறந்த திருச்சி, மைசூர், கொச்சி விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின.

அதோடு வானில் பறந்து கொண்டிருந்த மேலும் இரண்டு விமானங்களான வாரணாசி, பாட்னா ஆகிய விமானங்களும் தரையிறங்கின. இதேபோல் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான ஹைதராபாத், டெல்லி, கோவை, மதுரை, கவுகாத்தி, கொல்கத்தா, உள்ளிட்ட 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இதனால் சென்னை விமான நிலையத்தில், இன்று பகலில் பெய்த, திடீர் மழை காரணமாக 5 வருகை விமானங்கள், 8 புறப்பாடு விமானங்கள் மொத்தம் 13 விமானங்கள் தாமதம் ஆகின. இதனால் விமான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதையும் படிங்க :"தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கக் கூடாது" - முதலமைச்சருக்கு பசவராஜ் பொம்மை கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details