தமிழ்நாடு

tamil nadu

என்னவென்று சொல்வதம்மா யானைகளின் பேரழகை- வனக்காப்பாளரின் விழிப்புணர்வு பாடல்

By

Published : Aug 12, 2021, 6:34 AM IST

Updated : Aug 12, 2021, 7:07 AM IST

சினிமா பாடல் மெட்டுக்களுடன் பாடி பொதுமக்களிடையே யானைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார் வனக்காப்பாளர் சோழமன்னன்.

elephant-day-forest-guard-sang-elephant-awareness-song
என்னவென்று சொல்வதம்மா யானையின் பேரழகை- வனக்காப்பாளரின் விழிப்புணர்வு பாடல்

கோவை:காடு செழிப்பாக இருந்தால்தான் நாடு செழிப்பாக இருக்க முடியும் என்பார்கள். அந்த காட்டையே செழிப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு யானைகளுக்கு உண்டு. நாளொன்றுக்கு 200 கிலோ பசுந்தீவனங்களை உண்ணும் யானைகள், இடும் சாணத்தின் மூலம் பல்லுயிர் பெருக்கம் நிகழ்வதாகவும், வனப்பகுதி அடர்த்தியாவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த யானைகளை பாதுகாப்பது இயற்கையை பாதுகாப்பதற்கு சமம். யானைகள் அவ்வப்போது, காடுகளில் இருந்து இறங்கி விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதால், யானைகள் என்றாலே பாதிப்பு ஏற்படுத்தும் விலங்கு என பலரும் கருதுகின்றனர்.

யானைகள் தினம்

பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவியாக இருக்கும் யானைகள் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் வனத்துறையினர் பொதுமக்களிடம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். துறை ரீதியாக வனத்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், சில வன அலுவலர்கள் யானைகள், காடுகளை காக்க தனிப்பட்ட முறையில் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.

வனக்காப்பாளரின் விழிப்புணர்வு பாடல்

அந்த வகையில், கோவை வனச்சரகம் மாங்கரை வனத்துறை வாகன சோதனைச் சாவடியில் உள்ள வனக்காப்பாளர் சோழமன்னன் யானைகள் மீது கொண்ட காதலால் யானைகளின் சிறப்புகள் குறித்தும அதனால், மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் சினிமா மெட்டுடன் பாடல்களை இயற்றியும், பாடியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.

அவரை தொடர்பு கொண்டு யானைகள் குறித்தும், அவர் செய்யும் விழிப்புணர்வு குறித்தும் பேசினோம். பெயரிலேயே சோழன் என்று இருப்பதால் என்னவோ யானைகள் குறித்து ஆர்வத்துடன் பேச தொடங்கினார். அவர் பேசுகையில், "கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக வனத்துறையில் பணியாற்றிவருகிறேன். ஆரம்ப காலத்தில் சினிமா பாடல்கள் மீது இருந்த ஆர்வம் காரணமாக பாடல்களை பாடி வந்தேன்.

என்னவென்று சொல்வதம்மா யானையின் பேரழகை

வனத்துறையில் சேர்ந்த பின்னரும் பாடிவந்தேன். அப்போது, உயர் அலுவலர்கள் யானைகளின் சிறப்புகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாட கேட்டுக்கொண்டனர். அதையடுத்து சினிமா பாடலை அதன் மெட்டுடன் எழுதி விழிப்புணர்வு பாடலாக பாடத்தொடங்கினேன். இதற்கு அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்" என்கிறார்.

வனக்காப்பாளர் சோழமன்னன்

யானை என்பது வனத்துறையின் சொத்து அல்ல எனக்கூறும் அவர், அவை மக்களின் சொத்து என்கிறார். "ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினராக நினைத்து யானையை பாதுகாத்தால்தான் நம்மால் இயற்கையை பாதுகாக்க முடியும். அதன் மூலம் நம்மால் இயற்கை வளத்தை பாதுகாக்க முடியும். உலகில் உயிர் வாழ முடியும். அனைவரும் இணைந்து யானைகளை பாதுகாக்க வேண்டும்" என்று முடிக்கிறார்.

இதையும் படிங்க:கேரள அரசு சுட்டுக் கொல்ல நினைத்த யானையை காப்பாற்றியவர் - யார் இந்த யானை டாக்டர்?

Last Updated :Aug 12, 2021, 7:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details