ETV Bharat / state

கேரள அரசு சுட்டுக் கொல்ல நினைத்த யானையை காப்பாற்றியவர் - யார் இந்த யானை டாக்டர்?

author img

By

Published : Aug 12, 2020, 12:11 AM IST

Updated : Aug 12, 2020, 7:03 PM IST

சர்வதேச யானைகள் தினம் இன்று (ஆக.12) கடைப்பிடிக்கப்படும் நிலையில், 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை சாவின் விளிம்பில் இருந்து மீட்டெடுத்த வனத்துறை மருத்துவர் அசோகன் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு...

elephant-day
elephant-day

வனவிலங்குகள் மீதான அன்பை மட்டுமே பிரதானமாக கொண்டு உயிரை பணயம் வைத்து நேசிப்போடு செய்யும் பணி வனத்துறையினருடையது. குறிப்பாக, வனத்துறையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களின் நிலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

சொன்னால் கேட்டுக்கொள்ளும் விலங்குகளை பார்த்துப் பழகிய நமக்கு வனவிலங்குகள் எப்போதுமே அந்நியம்தான், யதார்த்தம் இப்படி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைக் குட்டி ஒன்று உடல்நலக்குறைவால் சாகும் நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. விரைந்து வரும் வனத்துறை மருத்துவக் குழுவை அருகில் வரவிடாமல் தடுத்த தாய் யானையை விரட்டிவிட்டு, குட்டி யானை அருகில் சென்றால் அது 80% உயிரற்ற நிலையில் கிடக்கிறது.

யானை மருத்துவர் அசோகன்
யானை மருத்துவர் அசோகன்

பரபரப்பான இரண்டு நாள் தொடர் மருத்துவ கவனிப்பிற்கு பின் யானைக் குட்டி மீண்டும் அதன் தாயுடன் சேர்ந்தது. அந்தத் தாய் யானை கண்களில் நீர் பெருக நன்றியுடன் பார்த்தது, கிருஷ் அசோகன் என வன உயிரின ஆர்வலர்களால் அன்புடன் அழைக்கப்படும் தமிழ்நாடு வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகனை.

யானை மருத்துவர் அசோகன்
யானை மருத்துவர் அசோகன்

1990-இல் எல்லா கால்நடை மருத்துவர்களையும் போல் சாதாரணமாக பணியில் இணைந்த அசோகனுக்கு, அப்போது யானை மருத்துவர் என அழைக்கப்பட்ட மருத்துவர் கிருஷ்ணமூர்த்தியின் பணிகள் மீது தீராக் காதல். அவருடன் பல ஆண்டுகள் பயணித்ததன் மூலம் காட்டு யானைகள் மீதான அன்பு அதிகரித்தது.

மருத்துவர் அசோகன் தனது 30 ஆண்டு பணி காலத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட யானைகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். அவர் தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

யானை மருத்துவர் அசோகன்
யானை மருத்துவர் அசோகன்

1998-இல் கேரள - தமிழக எல்லையான முதுமலைப் பகுதியில் 20-க்கும் மேற்பட்டோரை தாக்கி கொன்ற யானையை சுட்டுக்கொல்ல கேரள அரசு முடிவு செய்தது. இதற்கு வன உயிரின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, யானையை பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு யானை பிடிபட்ட பிறகே அது மக்னா யானை என்பதும், அதன் உடலில் சுமார் 22 துப்பாக்கி குண்டுகள் துழைத்திருந்ததும் தெரியவந்தது.

ஓராண்டு காலம் யானையை குழந்தை போல் பார்த்துக்கொண்ட மருத்துவர் அசோகனின் தொடர் சிகிச்சையால் யானை முழுமையாக குணமடைந்தது. இதனை தனது வாழ்வில் மறக்க முடியாது என்கிறார் மருத்துவர் அசோகன்.

அதேபோல் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் குட்டி யானையையும், தாய் யானையையும் காப்பாற்றியது தனக்கு மிகப்பெரிய அனுபவத்தை தந்ததாகவும், அந்தச் சமயங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனவும் தெரிவித்தார்.

கால்நடை மருத்துவம் படிக்கும் பலரும் வனத்துறை மருத்துவப் பணிக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். வன விலங்குகளின் மனநிலையை புரிந்துகொண்டால் அவற்றிற்கு சிகிச்சை அளிப்பது மிக சுலபமான விஷயம் என அசோகன் தெரிவிக்கிறார்.

சாதாரணமாக ஒரு பெண் யானை தனது வாழ்வில் ஐந்து குட்டிகள் வரை ஈன்றெடுக்கும். ஒரு பெண் யானையை காப்பாற்றினால் அதன் மூலம் ஐந்து யானைகளை காப்பாற்றியதற்குச் சமம் என்கின்றனர் யானை ஆர்வலர்கள். கானகத்தின் பேருயிரை காக்க தனது வாழ்நாளின் 30 ஆண்டுகளை செலவிட்டுள்ள மருத்துவர் அசோகனின் பணி மகத்தான பணியாகும். அவருக்கு நம் வணக்கத்தை உரித்தாக்குகிறோம்.

யார் இந்த யானை டாக்டர்?
Last Updated :Aug 12, 2020, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.