தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் தொகுப்புடன் வெள்ளம் பாதித்த மாவட்ட மக்களுக்கு ரூ.5,000 வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!

Pongal Gift: தமிழக அரசு சார்பில் பொங்கலை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் தொகுப்பில், ரொக்கப்பணம் பற்றி அறிவிக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

EPS strongly condemned for not declaring cash amount with Pongal gift
பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணத்தை அறிவிக்கவில்லை என இபிஎஸ் கடும் கண்டனம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 4:26 PM IST

சென்னை:தைப்பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 2024ஆம் ஆண்டிற்கான பொங்கல் தொகுப்பில், ரொக்கப்பணம் பற்றி அரசு அறிவிக்காதது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, "தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ஜெயலலிதா ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அரசிலும், பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமும் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி வழங்கப்பட்டு வந்தது.

எனது தலைமையிலான அரசில், கரோனா நோய்த்தொற்றின்போது, தமிழக மக்களின் வருமான இழப்பை ஈடுகட்டவும், பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடும், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. மேலும், முழு செங்கரும்பும் வழங்கப்பட்டது.

அப்போது, எதிர்கட்சியாக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் ரூ.2 ஆயிரத்து 500 போதாது என்றும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்றும் ஊடகங்களில் பேட்டியளித்தார். ஆனால் அவர், 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரொக்கப் பரிசு வழங்கவில்லை.

உருகிய வெல்லம், பல்லி விழுந்த புளி, கலப்பட மிளகு என்று தமிழக மக்கள் பயன்படுத்த முடியாத வகையில், 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை மட்டும் வழங்கி, தமிழக மக்களின் கேலிக்கு உள்ளானார். கடந்த ஆண்டு பொங்கலின்போது, பொங்கல் தொகுப்பில் அரிசி, சர்க்கரை, கரும்புத் துண்டு, ஏலக்காயுடன் ரொக்கப் பணமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு, பொங்கல் தொகுப்பை மட்டும் "விடியா அரசு" அறிவித்துள்ளது.

எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும். மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி, சென்னை புறநகர் பகுதி மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

எண்ணூர் முகத்துவாரத்தில் பரவிய கச்சா எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும், பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தற்போதைய கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்துள்ள தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

எனது தலைமையிலான அரசில், பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட கரும்பு, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த திமுக அரசு பொறுப்பேற்றவுடன் இடைத்தரகர்கள் மூலம் கரும்பு கொள்முதல் செய்தது. இதனால் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

நான் பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக திமுக அரசின் கரும்பு கொள்முதல் நடைமுறையைக் கடுமையாக எச்சரித்தேன். எனவே, இந்த ஆண்டு பொங்கல் பரிசாக வழங்கப்படும் கரும்பு கொள்முதலில், எந்த விதமான முறைகேடுகளுக்கும் இடம் தராமல், நேரடியாக கரும்பு சாகுபடி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். பணம், இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பொங்கல் பரிசுத் தொகுப்பு; சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க வலுக்கும் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details