தமிழ்நாடு

tamil nadu

Edappadi Palaniswami: அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி.. ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

By

Published : Mar 28, 2023, 11:38 AM IST

Updated : Mar 28, 2023, 11:55 AM IST

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆனார்
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் ஆனார்

சென்னை:அதிமுகவில் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி நடத்தப்படுவதாக மார்ச் 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விதிமுறைகளிலும் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அவர் ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவினை வழக்கின் தீர்ப்பு வரும்வரை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுத் தேர்தலை நடத்த அனுமதி வழங்கி இருந்தனர். இதனையடுத்து பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் தேர்தலை எதிர்த்துத் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பினை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி குமரேஷ் பாபு அறிவித்தார். அவர் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்து ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்தார்.

தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்ததை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு விரைந்தார். அங்கு அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

தேர்தல் முடிவினை வெளியிடுவதற்கான தடை நீங்கியதை அடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் இருவரும் கூட்டாக எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்து அவருக்கு வெற்றி சான்றிதழை வழங்கினர். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நிர்வாகிகள் அவருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தநிலையில் அவர் ஒருமனதாக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் ஏழாவது நபராக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்; ஓபிஎஸ் வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

Last Updated : Mar 28, 2023, 11:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details