சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''7.5.2021 அன்று திமுக அரசு பதவியேற்கும்போது உச்சத்திலிருந்த கரோனா எனும் கொள்ளை நோயை விரட்டி அடித்து, கரோனா எண்ணிக்கையை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்து சாதனை புரிந்துள்ளது. திமுக ஆட்சியின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக டெங்கு, மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதியுறுகிறார்கள் என்று பீதியை கிளப்பும் விரோதப் போக்கை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி.கே. பழனிசாமி கையாளுகிறார்" என்று தெரிவித்திருந்தார் .
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, 2019ஆம் ஆண்டு மட்டும் டெங்கு பாதிப்பு 8,527ஆக இருந்ததையும், மேலும் மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,088 இருந்ததையும், இந்த ஆண்டு (30.07.2023) வரை மலேரியாவினால் 164 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டினார்.
அதேபோல் 2019ஆம் ஆண்டு சிக்கன்குனியாவால் 681 பாதிக்கப்பட்டார்கள் என்றும், இந்த ஆண்டு (30.7.2023) வரை 45 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மக்களை காக்கும் பணியை செய்து வருவதால் தான் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோயினால் ஏற்படும் பாதிப்பு குறைந்து, கட்டுக்குள் இருக்கிறது என்று அறிவித்திருந்தார்.
தொடர்ந்து அந்த அறிக்கையில், "அதிமுக ஆட்சிகாலத்தில் மருத்துவத்துறை எந்த ஒரு புதிய திட்டங்களையும் கொண்டு வராமல், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தது. மு.க. ஸ்டாலின் ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரக பாதுகாப்புத் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் எனப் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் மருத்துவப் பயன் பெற்று வருகின்றனர்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.
விராலிமலைத் தொகுதியின் அவலம்:"ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், கடந்த 10 ஆண்டுகள் அதிமுக அரசு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் அரசு மருத்துவமனை வளாகத்தில், சரியாக பராமரிப்பின்றி அவதியுற்று, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட 50 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றுவதற்கு பழனிசாமியும் வழிகாட்டவில்லை, விஜயபாஸ்கரும் அவர் தொகுதியையே கடந்த 10 ஆண்டுகளாக பார்க்கவில்லை என்பதை தமிழ்நாடு மக்கள் உணராமல் இல்லை" தற்போதைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
மாத்திரைப்பற்றாக்குறை என உளறுகிறார்:"தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் 7 முதல் 10 முறைக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்க்காத மருத்துவமனையில்லை, ஆய்வு செய்யாத ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை என்ற நிலையில் தமிழ்நாடு மருத்துவத்துறையில் தன்னிறைவுப்பெற்ற மாநிலமாக திகழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பழனிசாமி வாய் புளித்தது மாங்காய் புளித்தது என்பது போல் மருந்து மாத்திரை பற்றாக்குறை என்று உளறுகிறார்.